தூத்துக்குடியில் குழந்தைகளின் படிப்பை யாரேனும் தடுத்தால் நடவடிக்கை: கலெக்டர் இளம்பகவத் எச்சரிக்கை

நமது மாவட்டத்தில் எந்த ஒரு மாணவரும் உயர்கல்வியில் சேராமல் இருக்கக்கூடாது, நீங்கள் உயர்கல்வி கற்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என்று கலெக்டர் இளம்பகவத் தெரிவித்தார்.;

Update:2025-06-22 16:14 IST

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று, மாவட்டத்தில் இதுவரை உயர்கல்வியில் சேராத மாணவர்களை கண்டறிந்து, அவர்களை அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் உயர்கல்வியில் கண்டிப்பாக சேர்க்கும் வகையில், அழைத்து வரப்பட்ட மாணவ, மாணவியர்களுடன் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் கலந்துரையாடி, உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து, மாணவர்களின் பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப உடனடி சேர்க்கைக்கு வழிவகை செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் பேசியதாவது:

கல்வி கற்பதற்கு பொருளாதாரம் ஒருபோதும் தடையாக இருந்துவிடக்கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு மாணவர்களின் நலன்காக்கும் வகையில் பல்வேறு முன்மாதிரியான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் மாணவ, மாணவியர்களிடையே உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் கல்லூரிக் கனவு, உயர்வுக்குப்படி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மாணவர்களாகிய உங்களுக்கு இந்த காலகட்டம்தான் உங்களுடைய வாழ்க்கையை தீர்மானிக்கக்கூடிய காலகட்டமாகும். மாணவர்கள் ஒவ்வொருவரும் மிகச் சரியான பாதையினை தேர்ந்தெடுத்து, படிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவர்களும் கல்வி கற்பதற்கு பொருளாதாரம் ஒருபோதும் தடையாக இருந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அரசு புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் உங்களுக்கு கல்வி கற்பதற்கு பொருளாதார சிக்கில் இருந்தால், அதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்டிப்பாக தேவையான உதவிகள் செய்துதரப்படும்.

மேலும் கல்வி உரிமைச் சட்டத்தின்படி குழந்தைகளின் படிப்பை யாராலும் தடுக்க முடியாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு பெற்றோர்கள் செயல்பட வேண்டும். தமிழ்நாடு அரசு பெண்களின் நலனில் மிகுந்த அக்கறைகொண்டு, பெண்களுக்கென பல்வேறு சிறப்பான திட்டங்களையெல்லாம் செயல்படுத்தி, பல துறைகளில் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இந்த வாய்ப்புகளையெல்லாம் நீங்கள் தவறாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தற்போது வளர்ந்துவரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப உங்களை நீங்கள் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இன்றைய போட்டி நிறைந்த சமுதாயத்தில் உயர்கல்வி என்பது மிகவும் இன்றியமையாததாகும். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் உயர்கல்வி கற்றீர்கள் என்றால் உங்களுடைய எதிர்காலம் மிகவும் சிறப்பாக அமையும். எனவே நமது மாவட்டத்தில் எந்த ஒரு மாணவரும் உயர்கல்வியில் சேராமல் இருக்கக்கூடாது, நீங்கள் உயர்கல்வி கற்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. எனவே மாணவர்கள் அனைவரும் கண்டிப்பான முறையில் உயர்கல்வியில் சேர்ந்து நன்கு கல்வி பயின்று வாழ்க்கையில் மிகச்சிறந்து இடத்திற்கு சென்று, உங்களுடைய வருங்கால சந்ததியினருக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் பயிற்றுநர்கள் தங்களது கல்வி நிறுவனங்களில் உள்ள பாடப்பிரிவுகள், கல்வி உதவித்தொகை, விடுதி வசதிகள், வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்து, உயர்கல்வி வழிகாட்டுதல்களை வழங்கினார்கள். தொடர்ந்து மாணவர்களின் பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உடனடி சேர்க்கையும் நடைபெற்றது. மேலும் கல்லூரிகள் தேர்வு, பாடப்பிரிவுகள் தேர்வு, உயர்கல்விக்கு விண்ணப்பிப்பது உள்ளிட்ட உயர்கல்வி தொடர்பாக ஏதேனும் சந்தேகம் ஏற்படும்பட்சத்தில் கட்டுப்பாட்டு அறையின் 93846 97546 மற்றும் 97888 59175 ஆகிய கைபேசி எண்களில் தொடர்புகொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர்கள், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், பயிற்றுநர்கள், வழிகாட்டி ஆசிரியர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், மாணவ- மாணவியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்