5 ஆண்டுகளுக்கு பிறகு தென்மேற்கு பருவமழையில் நிரம்பிய அடவிநயினார் அணை
5 ஆண்டுகளுக்கு பிறகு அடவிநயினார் அணை நிரம்பியதால் அனுமன்நதி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.;
5 ஆண்டுகளுக்கு பிறகு தென்மேற்கு பருவமழையில் அடவிநயினார் அணை நிரம்பியது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ளி அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருமவழை தீவிரமடைந்த நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 132.95 அடியாக இருந்தது. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நேற்று அணையின் நீர்மட்டம் 134.25 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 790 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 1500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 135.82 அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் 3 அடிக்கும் அதிகமாக உயர்ந்து 138.94 அடியாக உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் பிரதான அணைகளில் ஒன்றான அணையான மேக்கரை அடவிநயினார் அணை ஒரே நாளில் 7 அடிக்கும் அதிகமாக உயர்ந்து தனது முழு கொள்ளளவான 132.22 அடியை எட்டி நிரம்பி வழிந்தது. தென்மேற்கு பருவமழையில் கார்பருவ சாகுபடிக்கு 5 ஆண்டுகளுக்கு பிறகு அடவிநயினார் அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அணை நிரம்பி வழிந்ததை ஏராளமானவர்கள் கண்டு ரசித்தனர். இதனால் அனுமன்நதி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு அணையில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் களக்காடு வனப்பகுதியில் உள்ள சுற்றுலா தலமான தலையணையிலும் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.