அடிப்படை வசதியில்லாத வேளாண்மை கல்லூரி: அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
திமுக அரசை கண்டித்து கரூரில் நாளை மறுநாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுமென எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.;
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;
நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து, ஆட்சியில் அமர்ந்த திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு, கடந்த நான்கு ஆண்டு காலமாக மக்களை பல்வேறு வகைகளில் துன்புறுத்தி வருகிறது. மேலும், வருங்கால சந்ததியினர் கல்வி பயில்வதற்குத் தேவையான வசதிகளைக்கூட இந்த அரசு செய்து தராமல் வஞ்சித்து வருவது வேதனைக்குரிய விஷயமாகும்.
அந்த வகையில், 2021 டிசம்பர் மாதம், கரூர் மாவட்டத்தில் புதிய அரசு வேளாண்மைக் கல்லூரி துவங்குவதற்கு அரசாணை வெளியிடப்பட்டு, கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான அம்மா மண்டபத்தில் புதிய வேளாண்மைக் கல்லூரி தொடங்கப்பட்டு, மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் மாணவ, மாணவியர்களுக்குத் தேவையான ஆய்வகம், கழிப்பிட வசதிகள், தங்கும் வசதிகள் முதலானவை செய்து தரப்படாத காரணத்தால் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
இக்கல்லூரியில் கல்வி பயின்று வரும் மாணவ, மாணவியர், தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, கடந்த 7.3.2024 மற்றும் 6.5.2025 ஆகிய தேதிகளில் சாலை மறியல் போராட்டம் நடத்தியும், நிர்வாகத் திறனற்ற திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு இவ்விஷயத்தில் அக்கறை காட்டாமல் இருந்து வருகிறது. திமுக அரசின் இத்தகைய போக்கிற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு வேளாண்மைக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தராத, திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும்; மாணவர்கள் நலனைக் கருத்தில்கொண்டு அவர்களுக்குத் தேவையான வசதிகளை உடனடியாக செய்து தர வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கரூர் மாவட்டத்தின் சார்பில், 11.6.2025 – புதன் கிழமை காலை 10 மணியளவில், கரூர் தலைமை தபால் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி. தங்கமணி, தலைமையிலும்; கரூர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள்; உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மாநகராட்சி, நகர, பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நிர்வாகத் திறனற்ற திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.