கல்லூரி மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
கோவை, செஞ்சிலுவை சங்கம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுமென எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.;
சென்னை,
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;
”தமிழ் நாட்டில் திமுக அரசு பதவியேற்ற நாள் முதல், பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பல்வேறு வன்கொடுமைச் சம்பவங்கள்; பாலியல் சீண்டல்கள்; கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோதச் செயல்களும் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்கெட்டுள்ளது. இதன் உச்சமாக, நேற்று (2.11.2025) இரவு கோவை விமான நிலையத்தின் பின்புறம் கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத 3 நபர்கள், ஆண் நண்பரை கடுமையாகத் தாக்கிவிட்டு, மாணவியை தூக்கிச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, மாணவியை தனியார் கல்லூரியின் பின்புறம் தூக்கி எறிந்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்றும், பாதிப்புக்குள்ளான அம்மாணவி, இன்று (3.11.2025) அதிகாலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக வரும் செய்திகள், தமிழகத்தில் காவல்துறை என்று ஒன்று உள்ளதா ? என்ற கேள்வியை அனைவரிடமும் எழுப்பியுள்ளது. பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்துவிட்ட தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதிமுக ஆட்சியில் இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுந்த மாநிலங்களில் முதன்மை மாநிலமாக தமிழ் நாடு விளங்கியது. குறிப்பாக எனது தலைமையிலான அம்மா ஆட்சியில் இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுந்த மாநிலங்களில் தமிழ் நாடு முதலிடமும், பெருநகரங்களில் சென்னை முதலிடமும், நகரங்களில் கோயம்புத்தூரும் தொடர்ந்து இடம்பெற்றன. அம்மா அரசின் ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், கோவையில் கல்லூரி மாணவிக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும்; தொடர்ந்து தமிழ் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய; சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியைக் கண்டித்தும் அதிமுக ஒருங்கிணைந்த கோவை மாவட்ட மகளிர் அணியின் சார்பில், 4.11.2025 செவ்வாய்க் கிழமை காலை 11 மணியளவில், கோவை, செஞ்சிலுவை சங்கம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி தலைமையிலும்; கோவை மாநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளரும், மாநகராட்சி முன்னாள் மேயருமான லீலாவதி உண்ணி, கோவை புறநகர் வடக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் T. விமலா, கோவை புறநகர் தெற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் D. கண்ணம்மாள் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மகளிர் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில அளவில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வரும் மகளிர் நிர்வாகிகள், கழக மகளிர் அணி மாநில துணை நிர்வாகிகள், மகளிர் செய்தித் தொடர்பாளர்கள் மற்றும் கழக மகளிர் அணியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக மகளிர் உள்ளிட்ட பெண்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.