அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்
தமிழ்நாடு முழுவதும் எழுச்சிப் பயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிச்சாமி அதனை தற்காலிகமாக ரத்து செய்துவிட்டு டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.;
சென்னை,
2021 தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி தோல்வியை சந்தித்த நிலையில் 2024 மக்களவை தேர்தலில் அந்த கூட்டணி உடைந்தது. இருந்தபோதும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக செயல்பட்டு வரும் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் பாஜக கூட்டணியில் இணைந்து சுயேச்சையாக ராமநாதபுரம் மற்றும் தேனியில் போட்டியிட்டனர்.
அந்த தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடமும் பிடித்தனர். இதனால் அவர்கள் மீதான கோபம் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிகரித்தது. இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக பாஜக கூட்டணி உருவானது.
அந்த கூட்டணியை வலுப்படுத்த பாஜக தலைமை தீவிரமாகச் செயல்பட்ட நிலையில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரைச் சேர்க்க முடியாது என எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக மறுத்தார். தொடர்ந்து கூட்டணியும் உறுதி செய்யப்பட்ட நிலையில் தங்களை புறக்கணிப்பதாகக் கூறி ஓபிஎஸ், டிடிவி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி இருக்கின்றனர். அவர்கள் மீண்டும் வரவேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது. இது ஒருபுறம் இருக்க அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என செங்கோட்டையன் வலியுறுத்தினார்.
இதை அடுத்து அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. தொடர்ந்து டெல்லி பயணம் மேற்கொண்ட அவர் மத்திய மந்திரியும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினார். நேபாளத்தில் மக்கள் போராட்டம் வெடித்துக் கிளம்பி பரபரப்பாக இருந்த நிலையில் அதே நேரத்தில் செங்கோட்டையனை அவர் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் மேற்கொண்டு உள்ளார்.
அதிகாலையிலேயே சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி அங்கு தமிழ்நாடு இல்லத்தில் ஓய்வெடுத்தபின் மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமித்ஷாவை சந்திக்கும் முன் இன்று சி.பி. ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கும் எடப்பாடி பழனிசாமி தேநீர் விருந்தில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சிலர் கட்சியை கவலைக்கிடமாக்கி ஆட்சியை கவிழக்க பார்த்தார்கள். அதை காப்பாற்றி கொடுத்தவர்கள் மத்தியில் இருப்பவர்கள். நன்றி மறப்பது நன்றன்று, எனவே நன்றியோடு நாங்கள் இருக்கிறோம். ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம். இம்மியளவு கூட விட்டு கொடுக்கமாட்டேன். சில பேரை கைக்கூலியாக வைத்து கொண்டு ஆட்டம் போட்டு கொண்டு இருக்கிறீர்கள். அந்த கைக்கூலிகள் யார் என்று அடையாளம் காட்டிவிட்டோம். அதற்கு விரைவில் முடிவு கட்டப்படும்.
சிலர் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்ப்பதற்கு ஓட்டு போட்டார்கள். ஆனால் அவர்களை மன்னித்து துணை முதல்-அமைச்சர் பதவி கொடுத்தோம். மீண்டும் அவர்கள் திருந்தியபாடில்லை. மீண்டும் அ.தி.மு.க.வின் கோவிலான கட்சி அலுவலகத்தை அடித்து உடைத்தார்கள். அவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டுமா?
இன்னொருவர் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்ப்பதற்கு 18 எம்.எல்.ஏ.க்களை கடத்தி கொண்டு போனார்கள். அவர்களையும் கட்சியில் சேர்க்க வேண்டுமா?. அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்பவர்கள் நடுரோட்டில் தான் நிற்பார்கள் என்று சென்னையில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசியது குறிப்பிடத்தக்கது.