அஜித்குமார் கொலை வழக்கு: கூடுதல் செசன்சு கோர்ட்டுக்கு மாற்றம்

வழக்கு விசாரணையை மதுரை மாவட்ட 5-வது கூடுதல் செசன்சு கோர்ட்டுக்கு மாற்றி, 17-ந் தேதியில் இருந்து விசாரணையை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது.;

Update:2025-10-07 08:12 IST


சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளியாக இருந்த அஜித்குமார் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதில் இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து தனிப்படை போலீஸ்காரர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே அஜித்குமார் கொலை வழக்கு விசாரணையை விரைவாக நடத்தி கடந்த ஆகஸ்டு 20-ந்தேதிக்குள் குற்றப்பத்திரிகையை மாவட்ட கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ.க்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதன் பேரில் இந்த வழக்கை விரைவாக விசாரித்து போலீஸ் வாகன டிரைவர் ராமச்சந்திரனையும் குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் ஒருவராக சி.பி.ஐ. சேர்த்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் சி.பி.ஐ. தனது விசாரணையை தற்போது வரை தொடர்ந்து வருகிறது.

இதற்கிடையே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. கடந்த 19-ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது இந்த குற்றப்பத்திரிகையின் நகல் கைதான போலீஸ்காரர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கை மதுரை மாவட்ட முதன்மை கோர்ட்டுக்கு மாற்றி தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கு மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி சிவகடாட்சம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, அஜித்குமார் கொலை வழக்கு விசாரணையை மதுரை மாவட்ட 5-வது கூடுதல் கோர்ட்டு தொடர்ந்து விசாரணை செய்ய வேண்டும். இது தொடர்பான வழக்கு ஆவணங்களையும் அந்த கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வருகிற 17-ந் தேதி முதல் சம்பந்தப்பட்ட கோர்ட்டில் இந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்