‘ரோடு ஷோ’வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

‘ரோடு ஷோ’வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க சென்னையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.;

Update:2025-11-06 07:53 IST

கோப்புப்படம்

சென்னை,

கரூரில் த.வெ.க. சார்பில் நடந்த பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் ‘ரோடு ஷோ’ மற்றும் பிரசாரங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு தமிழ்நாடு அரசை சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தியிருந்தது. இதனையடுத்து கடந்த 1-ந் தேதி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசு கடந்த 3-ந் தேதி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டது.

அதில், தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகள் நடத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக தங்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிப்பதற்காக தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் உறுப்பினர்களை கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஒரு ஆலோசனைக் கூட்டம் 6-ந் தேதியன்று (அதாவது இன்று) காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் மூத்த அமைச்சர்களின் தலைமையில் நடத்தப்பட உள்ளது என்று கூறப்பட்டு இருந்தது.

அந்த வகையில் தலைமைச் செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) அனைத்து கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்