விஜயுடன் கூட்டணியா? எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் - ஓ.பன்னீர் செல்வம் பதில்
எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டதாக பிரேமலதா கூறியதற்கு அதிலேயே விளக்கம் உள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் பதில் அளித்துவிட்டு சென்றார்.;
தென்காசி,
மறைந்து முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர் செல்வத்திற்கும் இடையே அதிகார போட்டி நிலவியது. இதனால் கட்சியில் உட்கட்சி பூசல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக கட்சியில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை எடப்பாடி பழனிசாமி நீக்கி உத்தரவிட்டார். இது அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி ஒரு தரப்பினராகவும், ஓ பன்னீர்செல்வம் மற்றொரு தரப்பினர் ஒரு அணியாகவும் இருந்து வருகின்றனர்.தொடர்ந்து அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று நிர்வாகிகள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
இந்தநிலையில், தென்காசி மாவட்டம் நெற்கட்டும்சேவலில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அ.தி.மு.க. அணிகள் இணைய வேண்டும் என்ற சசிகலாவின் கருத்தை வரவேற்கிறேன். பிரிந்து கிடக்கும் சக்தியை ஒன்று சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறேன். வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்.
சட்டசபை தேர்தலில் விஜயுடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு, எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் என்று அவர் கூறினார். மேலும் பழனிசாமி முதுகில் குத்திவிட்டதாக பிரேமலதா கூறியதற்கு அதிலேயே விளக்கம் உள்ளதாக பதில் அளித்துவிட்டு சென்றார்.