அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் தொழில்கள் பாதிப்பு: உதவித் திட்டம் அறிவிக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்களுக்கான உதவித் திட்டத்தை விரைந்து அறிவிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.;
கோப்புப்படம்
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பதோடு மட்டுமல்லாமல், அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதிலும், மத்திய, மாநில அரசுகளின் வருவாயை பெருக்குவதிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், ஆயத்த ஆடைகள் மற்றும் ஜவளித்துறை, இயந்திரங்கள் துறை, வைரம் மற்றும் நகைகள் துறை, வாகன உதிரிபாகங்கள் துறை, மென்பொருள் துறை ஆகியவை சிறந்து விளங்குகின்றன என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட இன்றியமையாத் துறைகளுக்கு அமெரிக்காவின் ஐம்பது சதவீத வரி விதிப்பு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளதோடு, நாட்டின் ஏற்றுமதிக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து அமெரிக்க நாட்டிற்கு ரத்தினக் கற்கள், ஆபரணங்கள், ஆடைகள், பாதணிகள், மரச்சாமான்கள், தொழில்துறை ரசாயனங்கள் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், சென்ற மாதம் 27-ம் தேதியிலிருந்து இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்க நிர்வாகம் 50 சதவீத வரியை விதித்துள்ளது. இதன் காரணமாக 87 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இந்தியாவின் ஏற்றுமதி 50 பில்லியன் டாலராக குறையக்கூடும் என்றும், இதன் காரணமாக இந்திய ஏற்றுமதித் துறையின் போட்டித் தன்மை, நிலைத் தன்மை மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை அச்சுறுத்தலுக்கு ஆளாகும் என்றும் கூறப்படுகிறது.
ஜவுளித்துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்குகின்ற சூழ்நிலையில், தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு ஆயத்த ஆடைகள் மற்றும் ஜவுளிப் பொருட்கள் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போதைய அமெரிக்க அரசினுடைய ஐம்பது சதவீத வரி விதிப்பின் விளைவாக ஜவுளித்துறைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அரசின் ஐம்பது சதவீத வரி விதிப்பை சமாளிக்க மிகப்பெரிய வரி விலக்கு அளிக்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை வரிகள் குறைக்கப்பட்டு எளிமையாக்கப்படும்; நிதி உதவிகள் செய்யப்படும்; சந்தையை மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்றவற்றிற்கு மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தாலும், இது குறித்த கொள்கை எதையும் மத்திய அரசு இதுவரை வகுக்காதது தொழிலதிபர்கள் மத்தியிலும், தொழிலாளர்கள் மத்தியிலும் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்காவில் உற்பத்தியாகும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்திய ஆடைகளுக்கு வரி விதிப்பிலிருந்து விலக்கு பெற்றுத் தரவும், பொருட்கள் கப்பலில் ஏற்றப்படும் இடத்தில் உள்ள மொத்த விலை மதிப்பில் 20 சதவீத ஊக்கத் தொகை அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
எனவே அமெரிக்க அரசின் ஐம்பது சதவீத வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்களை ஆபத்திலிருந்து பாதுகாக்கும் வகையிலும், நாட்டின் ஏற்றுமதிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினை ஈடுகட்டும் வகையிலும், மானியம், வரி விலக்குச் சலுகைகள், ஊக்கத் தொகை, பிற நாடுகளுக்கான ஏற்றுமதியை விரிவுபடுத்துதல் ஆகியவை அடங்கிய ஓர் உதவித் திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டுமென்று மத்திய அரசை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.