இரண்டரை வயது குழந்தைக்கு சூடுவைத்த அங்கன்வாடி ஊழியர் - திண்டுக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்
திண்டுக்கல்லில் இரண்டரை வயது குழந்தைக்கு அங்கன்வாடி ஊழியர் சூடுவைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள சுரைக்காய்ப்பட்டி கிழக்குத் தெருவில் வசிக்கும் ராஜபாண்டி - சினேகா தம்பதிக்கு தர்ஷிகா ஸ்ரீ (இரண்டரை வயது) என்ற குழந்தை உள்ளது. இந்த சிறுமி அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில் அங்கன்வாடியில் இருந்து வீட்டுக்கு வந்த சிறுமி சோர்வுடன் காணப்பட்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் குழந்தையிடம் விசாரித்தபோது, அங்கன்வாடி ஊழியர் சிறுமிக்கு சூடுவைத்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அங்கன்வாடி ஊழியரின் வீட்டுக்கு சென்று இதுகுறித்து கேட்டுள்ளனர். அதற்கு குழந்தை சேட்டை செய்ததால் சூடுவைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகாரளித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கன்வாடி ஊழியர் இரண்டரை வயது குழந்தைக்கு சூடுவைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.