வேலூரில் 4 வயது குழந்தை கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது

மிளகாய் பொடியை தூவி விட்டு, 4 வயது குழந்தை யோகேஷை கடத்தி சென்றனர்.;

Update:2025-09-25 16:54 IST

வேலூர்,

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் 4 வயது ஆண் குழந்தை கடத்தப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே காமாட்சி அம்மன்பேட்டையை சேர்ந்த பாலாஜி என்பவர் கைதான நிலையில் அவரது நண்பர் விக்கி என்பவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். கைதான இருவரும் பணத்துக்காக குழந்தையை கடத்தியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

வழக்கின் முழுவிவரம்:-

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டை பவளக்காரதெருவை சேர்ந்தவர் வேணு (வயது 33). இவரது மனைவி ஜனனி (28). இவர்களது மகன் யோகேஷ் (3½). வேணு பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வீட்டில் இருந்தே பணியாற்றி வருகிறார். சிறுவன் யோகேஷ் குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறான்.

நேற்று மதியம் பகல் 12.20 மணி அளவில் பள்ளியில் இருந்து சிறுவன் யோகேஷை அவனது தந்தை வேணு ஸ்கூட்டரில் வீட்டிற்கு அழைத்து வந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது ஹெல்மெட், கையுறை அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென வேணு வீட்டிற்குள் நுழைந்து அவர் மீது மிளகாய் பொடியை தூவி விட்டு, சிறுவன் யோகேஷை தூக்கி சென்றுள்ளார்.

தனது கண்ணெதிரே மகன் கடத்தப்படுவதை கண்ட வேணு அதிர்ச்சி அடைந்து, அந்த நபரை விரட்டிச்சென்றார். ஆனால் அந்த நபர் அங்கு நின்று கொண்டிருந்த காரில் ஏறினார். அவரை வேணு பிடிக்க முயன்றபோது காருடன் சுமார் 50 மீட்டர் தூரம் வேணுவை சாலையில் உராய்ந்தபடி காரில் இருந்த மர்ம நபர்கள் இழுத்து சென்றனர்.பின்னர் அவர் கீழே விழுந்ததும் கார் வேகமாக சென்றுவிட்டது.

இது குறித்து குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சென்று அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட வெள்ளை நிற கார் ஒன்று கடந்த இரண்டு நாட்களாக வேணுவின் வீட்டின் அருகே நிறுத்தி நோட்டமிட்டு, சிறுவனை கடத்தியது தெரியவந்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ராகர்க், வேலூர் சரக டி.ஐ.ஜி. தர்மராஜ் ஆகியோர் உத்தரவின் பேரில், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்ட போலீசார் வழி நெடுகிலும் உள்ள சோதனைச்சாவடிகள், நெடுஞ்சாலை ரோந்து வாகனம் உள்ளிட்டவை உஷார் படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில், பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், இன்ஸ்பெக்டர்கள் ருக்மாங்கதன், விஸ்வநாதன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தினர். அதில் அந்த கார் உள்ளி கூட்ரோடு வழியாக திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் சென்றது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் ஜீப், கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் மாவட்டம் முழுவதும் கடத்தப்பட்ட சிறுவனை தேடிவந்தனர். குடியாத்தம் டவுன் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வீராசாமி, முதுநிலை காவலர் ரவிக்குமார் உள்ளிட்ட போலீசார் மாதனூர் நெடுஞ்சாலையில் சென்றபோது தேவிகாபுரம் பகுதியில் தனியார் திருமண மண்டபம் அருகே சிறுவனுடன் சிலர் நின்று கொண்டிருப்பது தெரியவந்தது.

உடனடியாக போலீசார் அங்கு சென்று விசாரித்தபோது காரில் வந்த ஒரு கும்பல் மதியம் 2.30 மணி அளவில் சிறுவனை இறக்கிவிட்டு சென்றதாக கூறப்பட்டது. அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் விரைந்து சென்று சிறுவனை மீட்டார்.

பின்னர் சிறுவனை பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், சிறுவன் யோகேஷை பெற்றோரிடம் ஒப்படைத்தார். கடத்தப்பட்ட 2 மணி நேரத்துக்குள் சிறுவன் மீட்கப்பட்டான். இந்த குழந்தை கடத்தல் சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து சிறுவன் கடத்தல் தொடர்பாக குடியாத்தம் பவளக்கார தெருவில் வேணுவின் வீட்டிற்கு அருகே வசிக்கும் தினகரன் மகன் பாலாஜி (27) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். பாலாஜி சொந்தமாக கார் வைத்து டிரைவர் ஆகவும், அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக டிரைவரைகவும் பணியாற்றி வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு பாலாஜி ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் ரூ.8 லட்சம் வரை செலவானது. இதில் இன்சூரன்ஸ் மூலம் ரூ.4 லட்சம் கிடைத்துள்ளது மீதி பணத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் நண்பரான குடியாத்தம் அடுத்த உள்ளி கூட்ரோடு பார்வதியாபுரம் பகுதியை சேர்ந்த மோகன் மகன் கார் டிரைவர் விக்கி (27) என்பவருடன் சேர்ந்து தனது வீட்டுக்கு அருகே வசிக்கும் என்ஜினீயர் வேணுவின் மகன் யோகேஷை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டு பாலாஜிக்கு சொந்தமான காரில் கடத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்