தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி
உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் புகையிலை உபயோகப்படுத்துவதால் ஏற்படும் கேடுகள் குறித்து விளக்கி பேசினர்.;
உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று (31.6.2025) தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவத் துறையினர் புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தனர். அப்போது அவர்கள் அனைவரும், "நான் ஒருபோதும் புகை பிடிக்கவோ அல்லது புகையிலைப் பொருட்களை யாதொரு வடிவிலும் உட்கொள்ளவோ மாட்டேன் என்றும், அவ்வாறு புகை பிடிப்பதற்கு அல்லது புகையிலைப் பொருட்களை யாதொரு வடிவிலும் உட்கொள்வதற்கு என்னுடைய உறவினர் அல்லது நண்பர்களை ஊக்குவிக்க மாட்டேன் என்றும், நான் என்னுடன் பணியாற்றும் சக ஊழியர்களை புகையிலை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க ஊக்குவிப்பேன் என்றும், மேலும் புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதினால் மாசுபடுவதிலிருந்து எனது சுற்றுச்சூழலை பாதுகாக்க பங்களிப்பேன் என்றும் உறுதி அளிக்கிறேன்" என்று கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் பத்மநாபன், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, நெஞ்சக நோய் பிரிவு தலைவர் சங்கமித்ரா, மனநல மருத்துவர் ஸ்ரீராம் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவத் துறையினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின்போது மருத்துவர்கள் புகையிலை உபயோகப்படுத்துவதால் ஏற்படும் கேடுகள் குறித்து விளக்கி பேசினர். மேலும் புதிய முறையில் இளைய தலைமுறையினரை புகையிலை பொருட்களால் கவர்ந்து சீரழிக்கும் விஷயங்கள் குறித்து விளக்கி பேசினார்கள்.