ஆடை குறித்து விமர்சனம்: கல்லூரி மாணவி- பூ வியாபாரி இடையே வாக்குவாதம் - வைரல் வீடியோ
பூ மார்க்கெட் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்லூரி மாணவி புகார் அளித்துள்ளார்.;
கோவை,
கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண், ஆந்திராவில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 21-ந் தேதி ‘சிலீவ் லெஸ்’ சுடிதார் அணிந்து கோவை பூ மார்க்கெட்டிற்கு சென்றார். அப்போது அவரிடம், அங்கிருந்த பூ கடை உரிமையாளர் ஒருவர் அரைகுறை ஆடை அணிந்தபடி பூ மார்க்கெட்டிற்கு வரக்கூடாது என கூறியதாக தெரிகிறது. இதனால் அந்த இளம்பெண்ணுக்கும், வியாபாரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அந்த இளம்பெண், ஆடை சரியாகத்தான் இருக்கிறது, உங்களது பார்வையை சரியாக வைத்து கொள்ளுங்கள் என வியாபாரியிடம் தெரிவித்தார். பூ மார்க்கெட்டில் இருந்த சில வியாபாரிகளும் அந்த இளம்பெண்ணுடன் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தநிலையில் அந்த இளம்பெண் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். பின்னர் அவர் கூறியதாவது:- எனது தாயார் வெளியூர் சென்றிருந்தார். அவர் வந்தவுடன் புகார் அளிக்கலாம் என இருந்ததால் தாமதமாகிவிட்டது. ஆடை குறித்து ஆபாசமாக பேசிய பூ மார்க்கெட் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுபோன்று பூ வியாபாரிகள் சங்கத்தினரும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதில், பூ மார்க்கெட்டில் ரீல்ஸ் எடுப்பதற்காக இளம்பெண்ணும், வீடியோகிராபரும் வந்தனர். வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்ததால் வீடியோ எடுக்க வேண்டாம் என்றோம். வியாபாரிகளை தவறாக சித்தரித்து உள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.