கோடையில் மிக குளிர்ந்த பானங்களை தவிர்க்க வேண்டும்- கலெக்டர் இளம்பகவத் அறிவுறுத்தல்
பொதுமக்கள் கோடை வெப்பத்தினால் உடலில் ஏற்படும் நீர் இழப்பை தடுக்க தண்ணீர், மோர், அரிசி கஞ்சி, இளநீர், பழச்சாறுகள், ஓஆர்எஸ் திரவம் ஆகியவற்றை பருகலாம் என்று கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.;
பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் கோடை வெயிலின் வெப்ப தாக்க தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் தற்போது கோடை வெப்ப அலைகளினால் வெப்ப தாக்கம் அதிகமாக உள்ளது. மனித உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும். சுற்றுப்புறச் சூழல் வெப்பநிலை அதிகமாகும்போது அதிகமான வியர்வை வழியாக உப்பு மற்றும் நீர்ச்சத்து அதிகமாக உடலிலிருந்து வெளியேறுகிறது.
அதிக வெப்பத்தினால் அதிக தாகம், தலைச்சுற்றல், கடுமையான தலைவலி, தசைப்பிடிப்பு, உடல் சோர்வடைதல், மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். மேலும் பச்சிளம் குழந்தைகள், சிறுவர் சிறுமியர்கள், வயதானவர்கள், கர்ப்பிணிகள், இணை நோய் உள்ளவர்களுக்கு வெப்பத்தாக்க அதிர்ச்சி ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. கோடை வெப்ப தாக்க பாதிப்புகளை தடுக்க காலை 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே நடமாடுவதை தவிர்க்கவும். வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் குடை கொண்டும் அல்லது தொப்பி அணிந்து செல்ல வேண்டும். வெயில் காலங்களில் காலணிகள் இல்லாமல் வெறும் காலில் நடப்பதை தவிர்க்கவும்.
குழந்தைகளை வெயில் காலங்களில் வாகனங்களில் தனியே விட்டுச்செல்லக்கூடாது. அடைக்கப்பட்ட வாகனங்களில் வெப்பம் அதிகமாகி, குழந்தைகள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடும். தனியே வசிக்கும் முதியவர்களின் உடல்நிலையை தினமும் இருமுறை சரிபார்க்கவும், வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றினால் அவர்களின் வெப்பத்தைத் தணிக்க ஈரமான துண்டுகளை கழுத்து மற்றும் கைகளில் வைக்கவும், குளிர்ந்த நீரில் குளிக்க வைக்கவும்.
கோடை வெப்பத்தினால் உடலில் ஏற்படும் நீர் இழப்பை தடுக்க தண்ணீர், மோர், அரிசி கஞ்சி, இளநீர், பழச்சாறுகள், ஓஆர்எஸ் திரவம் ஆகியவற்றை பருகலாம். மேலும் பருவகால பழங்களான தர்ப்பூசணி, முலாம்பழம், வெள்ளரி மற்றும் நுங்கு ஆகியவற்றை உணவாக எடுத்துக் கொள்ளலாம். வீட்டில் சமைத்த உணவுகளை உட்கொள்வது சிறந்ததாகும். ஐஸ் வாட்டர் போன்ற மிகக் குளிர்ந்த பானங்களைத் தவிர்க்க வேண்டும். வெளிர் நிறமுள்ள தளர்ந்த பருத்தி ஆடைகளை அணிவதன் மூலம் உடல் வெப்பத்தை குறைக்கலாம்.
வெப்ப தாக்க அதிர்ச்சி ஏற்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சையாக அந்த நபரை குளிர்ந்த நிழல் உள்ள காற்றோட்டமான பகுதியில் படுக்க வைத்து குடிப்பதற்கு பழச்சாறு அல்லது ஓஆர்எஸ் திரவம் அல்லது தண்ணீரைக் கொடுக்க வேண்டும். அவர்கள் உடல் வெப்பத்தை குறைப்பதற்கு குளிர்ந்த தண்ணீரால் உடல் முழுவதும் நனைத்து விட வேண்டும். பின்பு 108 அவசர ஊர்திக்கு அழைப்பு விடுத்து உடனடியாக அவரை அருகில் உள்ள அரசு மருத்துமனை அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனைக்கு மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்திட வேண்டும். கோடை காலத்தில் பரவும் நோய்களான அம்மை, தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி மற்றும் வெயில் கொப்பளங்களுக்கு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொண்டு மருத்துவரின் ஆலோசனைப்படி தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
எனவே பொதுமக்கள் மேற்சொன்ன கோடை வெயிலின் வெப்ப தாக்க பாதுகாப்பு வழிமுறைகளை கையாண்டு தங்களையும், தங்கள் குடும்பத்தாரையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.