தமிழக அரசியலில் பெரிய மாற்றங்கள் வரும்: அன்புமணி ராமதாஸ் பேட்டி

தி.மு.க.விற்கு தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்;

Update:2025-11-06 00:49 IST

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் ஈச்சம்பாடி அணைக்கட்டை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று பார்வையிட்டார். தொடர்ந்து அவர் ஈச்சம்பாடி அணைக்கட்டு பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் உபரி நீரை நீரேற்றம் செய்து 60 ஏரிகளுக்கு நிரப்பும் நீர் பாசன திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி விவசாயிகளுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து செய்தியளர்களுக்கு பேட்டி அளித்த அன்புமணி ராமதாஸ் கூறியதாவது,

பா.ம.க. சார்பில் உரிமை மீட்பு பயணம் மேற்கொண்டு இன்றோடு 100 நாட்கள் நிறைவடைகிறது. தமிழகத்தில் ரூ.11 லட்சத்து 33 ஆயிரம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக பொய்யான தகவலை தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் பொய். இதை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் நானே அந்த புத்தகத்தை வெளியிடுவேன். தற்போது வரை ரூ.1 லட்சம் கோடிக்கு கூட தமிழகத்தில் முதலீடு நடைபெறவில்லை.

தேர்தல் வந்தால் பணத்தை கொடுத்து ஜெயித்து விடலாம் என்று கணக்கு போடும் தி.மு.க.விற்கு நீங்கள் தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும். சேலம் அருளை கட்சியிலிருந்து நீக்கி விட்டோம். அவர் பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் கிடையாது. பா.ம.க. நடை பயணத்தால் இந்தியா-பாகிஸ்தான் சண்டை வந்துவிட்டது போல் பேசுகிறார்கள். இன்னும் ஒரு சில வாரங்களில் பெரிய அரசியல் மாற்றங்கள் தமிழ்நாட்டில் வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்