கொச்சியில் சரக்கு கப்பல் கடலில் மூழ்கிய சம்பவம்:- குமரி கடற்கரையில் ஒதுங்கிய கன்டெய்னர்

கொச்சியில் சரக்கு கப்பல் கடலில் மூழ்கிய நிலையில் குளச்சல் அருகே வாணியக்குடி கடற்கரையில் கன்டெய்னர் கரை ஒதுங்கியது.;

Update:2025-05-30 08:59 IST

கேரள மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி துறைமுகத்திற்கு புறப்பட்ட லைபீரியா நாட்டு சரக்கு கப்பல் கடந்த 24-ந் தேதி ஆழ்கடலில் மூழ்கியது. அதில் கால்சியம் கார்பனேட், முந்திரி கொட்டை, பிளாஸ்டிக் மூலப்பொருள்கள் உள்பட பல்வேறு பொருட்கள் 640 கன்டெய்னர்களில் இருந்தன. மூழ்கிய கப்பலில் இருந்து பல கன்டெய்னர்கள் மீட்கப்பட்டன. சில கன்டெய்னர்கள் கேரள கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கின.கப்பல் மூழ்கி 6 நாட்கள் கடந்த நிலையில் கடல் நீரோட்டத்தில் சில பொருட்கள் கேரள கடல் பகுதியில் இருந்து குமரி கடல் பகுதிக்கு வந்த வண்ணம் உள்ளது.

இந்தநிலையில் நேற்று குளச்சல் அருகே வாணியக்குடி கடலில் ஒரு கன்டெய்னர் கரை ஒதுங்கியது. இதை பார்த்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வாணியக்குடி, மண்டைக்காடு, சின்னவிளை, கடியப்பட்டணம் போன்ற கடற்கரைகளில் பிளாஸ்டிக் சாக்கு மூடைகள் கரை ஒதுங்கின. அந்த மூடைகளில் இருந்த வெள்ளை நிற பிளாஸ்டிக் மூலப்பொருட்கள், முந்திரி கொட்டை போன்றவை அலையில் கரை ஒதுங்கிய நிலையில் சிதறி கிடந்தன. இதனை அறிந்த மீனவர்கள் கடற்கரையில் திரண்டனர்.

தகவல் அறிந்து கலெக்டர் அழகு மீனா மற்றும் வருவாய் துறையினர் கடற்கரைக்கு வந்து கன்டெய்னர் மற்றும் சாக்கு மூடைகளை பார்வையிட்டனர். குமரி கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் மூலப்பொருட்களை கடற்கரையில் இருந்து அகற்றுவதற்காக குஜராத்தில் இருந்து குழுவினர் வர உள்ளனர். அவர்கள் வந்து தங்களது பணியை தொடங்கும் வரை பொதுமக்கள் யாரும் பிளாஸ்டிக் மூடைகள் மற்றும் உதிர்ந்து கிடக்கும் பிளாஸ்டிக் மூலப்பொருளின் அருகில் செல்ல வேண்டாம் என கலெக்டர் அழகுமீனா எச்சரித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்