ஆதவ் அர்ஜுனாவிற்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட் நீதிபதி கேட்ட கேள்வி
ஆதவ் அர்ஜுனா தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜரானார்;
சென்னை,
கரூர் துயர சம்பவத்தில் 41 பேர் பலியான நிலையில், தவெக நிர்வாகிகளை காவல் துறை கைது செய்து வந்தது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கரூர் துயர சம்பவம் தொடர்பாக தனது எக்ஸ்தள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.
அதில், அரசின் அடுக்குமுறைக்கு எதிராக, தமிழக அரசை எச்சரிக்கும் வகையில் பதிவிட்டிருந்தார். பின்னர் சிறிது நேரத்தில் அந்த பதிவை ஆதவ் அர்ஜுனா நீக்கிவிட்டார். ஆனால் இந்த பதிவின் அடிப்படையில் அவர் மீது சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கலவரத்தை தூண்டுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஆதவ் அர்ஜுனா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ''34 நிமிடங்களில் சமூக வலைதளப் பதிவுகளை நீக்கிவிட்ட நிலையில், அரசியல் உள்நோக்கத்துடன் எனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. என்னுடைய எக்ஸ் தள பதிவானது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் பதிவிடப்படவில்லை. அந்த பதிவு போட்டதில் எனக்கு எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை. ஆனால், எனக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகாரை முழுமையாக கவனிக்காமல் அவசர கதியில் எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் துறை என் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும்'' என்று தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. ஆதவ் அர்ஜுனா தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜரானார். அவர் வாதிடுகையில், “
ஆதவ் அர்ஜூனாவின் பதிவு உடனடியாக நீக்கப்பட்டது. நள்ளிரவு போடப்பட்ட பதிவு என்பதால் பெரும்பாலானோர் பார்க்க வாய்ப்பு இல்லை. எந்த விசாரணையும் நடத்தாமல், புகாரை அப்படியே வழக்காக பதிவு செய்துள்ளனர்” என்று வாதிட்டார். அப்போது நீதிபதிகள், “ எக்ஸ் தளத்தில் பதிவு செய்யப்பட்ட பின்னர் அது நீக்கப்பட்டது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?” எனக்கேள்வி எழுப்பினர். இதற்கு ஆம் என்று ஆதவ் அர்ஜூனா தரப்பு பதிலளித்தது. இதையடுத்து, வழக்கின் விசாரணை வரும் 7-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதுவரை இறுதி அறிக்கையை தாக்கல் செய்யக் கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.