அரியானாவில் மக்களின் தீர்ப்பை திருடிய பாஜக - மு.க.ஸ்டாலின் தாக்கு

பாஜகவின் அண்மைகால தேர்தல் வெற்றிகள் சந்தேகம் தருகிறது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.;

Update:2025-11-05 17:59 IST

சென்னை,

வாக்கு திருட்டு தொடர்பாக புதிய தகவல்களை இன்று வெளியிடுவதாக ராகுல் காந்தி அறிவித்து இருந்தார். அதன்படி டெல்லியில், உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

தேசிய மற்றும் மாநில அளவில் நடந்த வாக்கு திருட்டு மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரியானா தேர்தலில் முறைகேடு நடைபெற்றது. காங்கிரசின் வெற்றியை பாஜகவின் வெற்றியாக மாற்றம் செய்ய திட்டம் வகுக்கப்பட்டது.அரியானாவில் 25 லட்சம் ஓட்டுகள் திருடப்பட்டு இருக்கிறது. 5.21 லட்சம் ஓட்டுகள் போலி. 93,174 ஓட்டுகள் போலியான முகவரிகள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டை சேர்ந்த மால் அரியானாவில் ஓட்டு போட்டுள்ளார். அவரது பெயர் எப்படி சேர்க்கப்பட்டது. வாக்கு திருட்டு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பொய் சொல்கிறது. நாடு முழுவதும் வாக்கு திருட்டு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது என்றார்.

இந்தநிலையில், அரியானாவில் வாக்கு திருட்டு குறித்து ராகுல் காந்தி வெளியிட்ட சான்றுகள் அதிர்ச்சி அளிக்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்!

அண்மைக்காலமாக பா.ஜ.க. பெற்று வரும் தேர்தல் வெற்றிகளின் உண்மைத்தன்மை குறித்து மீண்டுமொரு முறை பெரும் ஐயம் எழுகிறது. ஹரியானாவில் நடைபெற்றுள்ள வாக்குத் திருட்டு குறித்து எனது சகோதரரும், மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான திரு.

@ரகுல்கந்தி அவர்கள் வெளியிட்டுள்ள 'பச்சையான ஆதாரங்கள்' அதிர்ச்சியூட்டுகின்றன.

வெறுப்பினை மூட்டி, பொய் வாக்குறுதிகளைக் கூறி 2014-இல் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க.வின் பிளவுவாத அரசியலை மக்கள் இனியும் நம்பத் தயாராக இல்லை என்ற நிலை எப்போதோ ஏற்பட்டுவிட்டது. ஆகையால் தேர்தலில் முறைகேடுகள் என்பதையெல்லாம் தாண்டி, வாக்காளர் பட்டியலிலேயே அப்பட்டமான அட்டூழியத்தை அரங்கேற்றி, மக்களின் ஜனநாயகத் தீர்ப்பைக் களவாண்டு, இன்று அம்பலப்பட்டு நிற்கிறது. இதன் அடுத்தகட்டம்தான் #SIR என்ற பெயரில் மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதி என்பதற்கு பீகாரும், இன்று வெளியாகியுள்ள #HaryanaFiles-உமே சான்று!

இவை அனைத்துக்கும் பொறுப்பான தேர்தல் ஆணையம் இத்தனை குற்றச்சாட்டுகள், அடுக்கடுக்கான ஆதாரங்களோடு முன்வைக்கப்பட்டும் எந்த ஒரு முறையான விளக்கமும் அளிக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது. மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் தேர்தல் ஆணையம் மக்கள் மன்றத்தில் உரிய பதில் சொல்லி, இந்தியாவில் மக்களாட்சி முழுவதும் குழிதோண்டிப் புதைக்கப்படவில்லை என நம்பிக்கையைத் துளிர்க்க வைக்குமா? என அதில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்