சென்னை மெரினா கடலில் இறங்கி தூய்மை பணியாளர்கள் போராட்டம்
பேச்சுவார்த்தை தொல்வியடைந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்.;
சென்னை மாநகராட்சி 5 மற்றும் 6-வது மண்டலங்களில் பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் சிலர் கடந்த 2 மாதமாக பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தூய்மைப் பணி தனியாரிடம் கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள் தற்போது தங்களையும் பணியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். பழைய பணி நிலையிலேயே நிரந்தர படுத்த வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை பின்புறம் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். உழைப்போர் உரிமை இயக்க தலைவர் பாரதி தலைமையில் தூய்மை பணியாளர்கள் கடலுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை போலீசார் அங்கிருந்து வெளியேற்றி கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருப்பினும், போலீசாரின் பேச்சுவார்த்தை தொல்வியடைந்தது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவத்தால் மெரினா கடற்கரையில் பரபரப்பான சூழல் நிலவியது.