த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்பட 8 பேர் மீது வழக்கு
போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புஸ்சி ஆனந்த் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;
திருச்சி,
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வருகிற 13-ந்தேதி தனது முதற்கட்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தை திருச்சியில் இருந்து தொடங்க இருக்கிறார். இதற்காக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் அனுமதி பெறுவதற்காக, கடந்த 6-ந்தேதி கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்தார்.
அவரை வரவேற்பதற்காக ஏராளமான த.வெ.க. தொண்டர்கள் விமான நிலையத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர் விமான நிலையம் எதிரே உள்ள விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது த.வெ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் வந்த வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டு இருந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கார்களை அப்புறப்படுத்தும்படி அறிவுறுத்தினர். இதனால் த.வெ.க.வினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்பட 8 பேர் மீது பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாகவும், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது, சட்ட விரோதமாக ஒன்று கூடியது உள்பட 4 பிரிவுகளின் கீழ் திருச்சி விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.