பட்டாசு கழிவுகளை குப்பை தொட்டியில் கொட்டக்கூடாது - சென்னை மாநகராட்சி வலியுறுத்தல்
பட்டாசு கழிவுகளை தனியாக சேகரித்து தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.;
தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இதையொட்டி, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க வேண்டுமென நேரக் கட்டுப்பாடு உள்ளது.
எனவே, பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பொதுமக்கள் குறைந்த ஒலியுடன், குறைந்த காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை மட்டுமே வெடிப்பது நல்லது. பட்டாசு கழிவுகளை குப்பை தொட்டியில் கொட்டக்கூடாது எனவும், தனியாக சேகரித்து தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
பட்டாசு வெடிக்கும்போது குழந்தைகளை பெற்றோர்கள் தங்களது மேற்பார்வையில் பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளால் காதுகள் பாதிக்கப்படுவதை தவிர்க்க காதுகளில் பருத்தி பஞ்சுகளை செருகி வைத்தல் நல்லது. மருத்துவ முதலுதவி பெட்டிகளை அருகில் வைத்திருக்க வேண்டும்.
பட்டாசு கழிவுகளை வீடுகளில் உள்ள ஈரமான அல்லது உலர் கழிவுகளுடன் சேர்க்கக்கூடாது. பட்டாசு கழிவுகளை சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்படும் குப்பை தொட்டிகளில் கொட்டக்கூடாது. தனியாக கோணி பைகளில் வைத்து அவற்றை தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். பொதுமக்கள் அவசர மருத்துவ உதவிக்கு 108 என்ற எண்ணை அழைக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.