முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பொது மற்றும் மறுவாழ்வு துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம்
18 மாவட்டங்களில் உள்ள 34 முகாம்களில் 3,919 வீடுகள் கட்டி தரும் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து முதல்-அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.;
சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில், பொது மற்றும் மறுவாழ்வு துறைகளின் செயல்பாடுகள் குறித்தும், வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்தும் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த பொது மற்றும் மறுவாழ்வு துறை ஆய்வு கூட்டத்தில், அயல்நாடுகளில், வெளிமாநிலங்களில் பணிக்கு சென்று அங்கு எதிர்பாராதவிதமாக இறக்கும் தமிழர்களின் குடும்பத்திற்கு மாத ஓய்வூதியம் வழங்கும் திட்டம், சுயதொழில் தொடங்க ஆர்வமாகவுள்ள இலங்கை தமிழர்களுக்கு கடனுதவி வழங்கும் திட்டம், இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பான, தரமான தங்குமிடங்களை வழங்கும் நோக்கத்துடன் இரண்டாம் கட்டமாக 18 மாவட்டங்களில் உள்ள 34 முகாம்களில் 3,919 வீடுகள் கட்டி தரும் திட்டம், முன்னாள் படை வீரர்கள் தங்குவதற்கான புதிய விடுதி கட்டும் பணி போன்ற பல்வேறு அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்து முதல்-அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
2021-2022 முதல் 2025-26 வரை பொது மற்றும் மறுவாழ்வு துறையால் அறிவிக்கப்பட்ட 90 அறிவிப்புகளில், 68 அறிவிப்புகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், முடிவுறும் தருவாயில் உள்ள ஏனைய அறிவிப்புகள் தொடர்பான பணிகளை விரைந்து நிறைவேற்ற அறிவுறுத்தினார்.
இக்கூட்டங்களில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், தலைமை செயலாளர் நா. முருகானந்தம், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு, பொதுப்பணி துறை கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்மா, சிறப்பு திட்ட செயலாக்க துறை கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப் யாதவ், நிதித்துறை முதன்மை செயலாளர் த. உதயச்சந்திரன், பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் துறை தலைவர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.