மூத்த நடிகர் ராஜேஷ் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

நடிகர் ராஜேஷ் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார்.;

Update:2025-05-29 12:28 IST

கோப்புப்படம் 

தமிழ்த் திரையுலகின் மூத்த நடிகரான ராஜேஷுக்கு (75 வயது) இன்று காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். நடிகர் ராஜேஷின் உடல் சென்னை, ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ராஜேஷின் திடீர் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

வெளிநாட்டில் இருக்கும் அவரது மகள் திவ்யா சனிக்கிழமை (மே 31-ந் தேதி) நள்ளிரவில்தான் சென்னை வந்தடைவார் என்று கூறப்படுகிறது. அதனால், நடிகர் ராஜேஷின் இறுதி சடங்கு ஜூன் 1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்த் திரையுலக மூத்த நடிகர் ராஜேஷ் மறைவுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

தமிழ்த் திரையுலக மூத்த நடிகர் ராஜேஷ் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். 40 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 150 திரைப்படங்கள் மற்றும் பல சின்னத்திரைத் தொடர்களில் நடித்ததோடு, பின்னணிக் குரல் கலைஞராகவும் முத்திரை பதித்தவர் ராஜேஷ். முத்தமிழறிஞர் கலைஞர் மீது அளவற்ற மரியாதையும், அன்பும் கொண்டு விளங்கினார். கலைஞரும், ராஜேஷின் திருமணம் முதலிய அவரது இல்ல நிகழ்ச்சிகளில் தவறாது கலந்துகொண்டு வாழ்த்துவது வழக்கம்.

கலைஞர் மறைவுற்றபோது, "தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் குடும்பங்களிலும் அவர் ஓர் அங்கம்" என நெகிழ்ச்சியோடு பேசி தனது இரங்கலைத் தெரிவித்தவர் ராஜேஷ் என்பதை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன். திரைத்துறையில் அவரது நீண்ட அனுபவத்தைக் கருத்தில்கொண்டு, கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக அவரை நியமித்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்