கோரிக்கை வைத்த சில மணி நேரங்களிலேயே கூலி தொழிலாளிக்கு அரசு பணி வழங்கிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

சேர்க்காடு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பொற்செல்வி வறுமை சூழ்நிலையில் வாழ்வதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.;

Update:2025-06-25 20:02 IST

வேலூர்,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வேலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது, காட்பாடி வட்டம் சேர்க்காடு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பொற்செல்வி என்பவர் முதல்-அமைச்சரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் ஆதரவற்ற நிலையில் வறுமை சூழ்நிலையில் வாழ்வதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் பொற்செல்வி வழங்கிய கோரிக்கை மனுவில் தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாகவும், தன்னுடைய மாமனார் ஒரு மாற்றுத்திறனாளி என்பதாலும் அவர்கள் அனைவரையும், தான் கூலி வேலை செய்து காப்பாற்றி வருவதாகவும் தெரிவித்து தனக்கு ஏதேனும் ஒரு அரசுப் பணி வழங்க வேண்டும் என்று கோரி இன்று காலை விண்ணப்பம் மனு அளித்தார்.

பொற்செல்வியின் ஏழ்மை நிலையை பரிவோடு கருதி, அவரது மனுவை உடனடியாக ஏற்றுக்கொண்டு, முதல்-அமைச்சர் பொற்செல்விக்கு ரூபாய் 17,000 மாத சம்பளத்தில் காட்பாடி அன்னை சத்யா காப்பகத்தின் விடுதி காவலருக்கான பணி நியமன ஆணையை அவரிடம் வழங்கினார்.

முதல்-அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்த சில மணி நேரங்களில், பணி நியமன ஆணை கிடைத்ததால், அதனை பெற்றுக் கொண்ட பொற்செல்வி அளவில்லாத மகிழ்ச்சியோடு, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை வணங்கி நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் 21,776 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் அடையாளமாக 12 பேருக்கு பட்டாக்களை வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்