முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 12-ந்தேதி கோவை செல்கிறார்

கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.;

Update:2025-08-05 09:43 IST

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 22, 23-ந்தேதிகளில் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதாக இருந்தது. இந்தநிலையில் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் இந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. உடல்நலம் சரியானதை தொடர்ந்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மாவட்டந்தோறும் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகிற 12-ந் தேதி கோவை செல்கிறார். இதற்காக 11-ந் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு செல்கிறார். கோவை விமானநிலையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

இதன்பின்னர் முதல்-அமைச்சர் கார் மூலம் திருப்பூர் மாவட்டம் செல்கிறார். அங்கு பல்லடம் மற்றும் உடுமலைபேட்டையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதில் அமைச்சர்கள், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இதன்பின்னர் 12-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொள்ளாச்சிக்கு வருகிறார். பின்னர் பொள்ளாச்சி-உடுமலை சாலையில் உள்ள நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலக வளாகத்தில் பரம்பிக்குளம், ஆழியாறு பாசன திட்டம் நிறைவேற காரணமாக இருந்த பெருந்தலைவர் காமராஜர், சி.சுப்பிரமணியம், பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகிய தலைவர்களின் உருவ சிலைகளை முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார். இதில் மாவட்ட கலெக்டர் மற்றும் அமைச்சர்கள், அரசு துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

இதன்பின்னர் கார் மூலம் புறப்பட்டு கோவை அவினாசி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெறும் கோவைக்கான மாஸ்டர் பிளான் திட்டம் 2041 குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதில் மாஸ்டர் பிளான் குறித்து பொதுமக்கள் மற்றும் தொழில்முனைவோர்களின் ஆலோசனைகளை அவர் கேட்டறிகிறார். முதல்-அமைச்சர் கோவை வருகையை முன்னிட்டு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்