பள்ளிகளில் காலநிலைக் கல்வி திட்டம் தொடங்கி வைப்பு

காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய சுற்றுப்புற வெப்ப அதிகரிப்பின் காரணமாக நகர்புற வெப்பத்தீவு விளைவுகள் ஏற்படுகின்றன.;

Update:2026-01-19 16:42 IST

சென்னை,

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரூ.24 கோடியில் ‘காலநிலை கல்வி திட்டம்’ செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் அறிவித்து இருந்தார்.

இந்தநிலையில் நிதி, சற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று (19.01.2026) சென்னை, தலைமைச் செயலகத்தில் அரசு பள்ளிகளில் காலநிலைக் கல்வி மற்றும் குளுமைப் பள்ளிகள் திட்டத்தினை துவக்கி வைத்தார்கள்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் வாயிலாக காலநிலை மாற்றச் சவால்களை எதிர்கொள்ள பல்வேறு தடுப்பு மற்றும் தகவமைப்பு நடவடிக்களை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, தமிழ்நாடு போன்ற நீண்ட நெடிய கடற்கரையினைக் கொண்ட மாநிலத்தில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் வழக்கமாகி வருகின்ற சூழலில், இச்சவால்களை எதிர்கொள்ளத் தேவையான விழிப்புணர்வு மற்றும் கல்வியறிவினை அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தினை உணர்ந்து, கடந்த 2025-26 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு கூட்டத்தொடரின் போது காலநிலைக் கல்வியறிவினை நம் மாநிலத்தின் கல்வி அமைப்பின் அனைத்து மட்டங்களிலும் ஒருங்கிணைத்து எடுத்துச்செல்ல காலநிலைக் கல்வியறிவு முன்னெடுப்பு (Climate Education Initiative) குறித்த அறிவிப்பு நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களால் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இம்முன்னெடுப்பின் கீழ் மாணவர்களுக்கு கோடைகால மற்றும் குளிர்கால இயற்கை முகாம்கள், காலநிலை மாற்றம் குறித்து பள்ளி ஆசிரியர்களுக்கான உறைவிடப் பயிற்சி முகாம்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு சூழல் அறிவோம் எனும் தலைப்பிலான விநாடி வினா ஆகியவை பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையால் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, “சூழல் 2.0” விநாடி வினாவின் இறுதிப் போட்டி கடந்த 06.01.2026 அன்று நடைபெற்ற நிலையில், இன்று, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை கூட்ட அரங்கில், “காலநிலைக் கல்வி” மற்றும் குளுமைப் பள்ளிகள் முன்னெடுப்புகளின் துவக்கவிழா நடைபெற்றது.

அப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,காலநிலைக் கல்வியறிவு பாடத்தொகுதிகளை வெளியிட்டு, காலநிலைக் கல்வி திட்டத்தினைத் துவங்கி வைத்தார்.

அதேபோல், காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய சுற்றுப்புற வெப்ப அதிகரிப்பின் காரணமாக நகர்புற வெப்பத்தீவு விளைவுகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக ஏற்படக்கூடிய தாக்கங்கள் மாணவர்கள் மீதும் அவர்கள் கற்றல் திறனிலும் எதிரொலிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கும் நிலையில், பள்ளி வகுப்பறைகளிலும் மாணவர்களுக்கு இதமான கற்றல் சூழலை உருவாக்கும் பொருட்டு, தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் 2025-26ம் ஆண்டிற்கான செயல்திட்டத்தில் குளிர் கூரை முன்னெடுப்பு சேர்க்கப்பட்டு, அம்பத்தூர் பெருந்தலைவர் காமராஜர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன் விளைவாக வகுப்பறைகளின் வெப்ப நிலை 1.5 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைந்தது தெரிய வந்தது. இதனை மேற்கோள்காட்டி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த மாதம் நடைபெற்ற தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான ஆட்சிமன்றக் குழுவின் மூன்றாவது கூட்டத்தில், இத்திட்டம், தமிழ்நாட்டின் அனைத்து பசுமைப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தினால் (UNEP) உருவாக்கப்பட்ட பசுமையான எதிர்காலத்திற்கு குளுமையான வகுப்பறைகள் மற்றும் பசுமைப் பள்ளிகளில் அமைவான குளிரூட்ட உத்திகளை ஒருங்கிணைத்தல் ஆகிய புத்தகங்களை வெளியிட்டு, செனாய் நகரிலுள்ள சென்னைப் பெண்கள் மேல் நிலைப் பள்ளியிலும், திருவான்மியூர் சென்னை மேல்நிலைப் பள்ளியிலும் குளுமைப் பள்ளிகள் திட்டத்தினை துவங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹ்யூமன் செட்டில்மெண்ட்ஸ் நிறுவனத்தின் பசுமைப் பள்ளிகள் தாக்க அறிக்கையினை வெளியிட்டு, சென்னை, அம்பத்தூர் பெருந்தலைவர் காமராஜர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொல்லுமேடு அரசு மேல் நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு பசுமைப் பள்ளிகளுக்கான சான்றிதழ்களை வழங்கினார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்