மதுரையில் அரசு பேருந்தின் டயர் வெடித்து விபத்து - 20-க்கும் மேற்பட்டோர் காயம்
மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.;
மதுரை,
மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று சுமார் 55 பயணிகளை ஏற்றிக்கொண்டு பழனி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ஓட்டுநர் சுப்புராஜ் என்பவர் இயக்கி வந்தார்.
அந்த பேருந்தானது, மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே கட்டபுளி நகர் பகுதியில் உள்ள மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பேருந்தின் பின்பக்க டயர் திடீரென வெடித்துள்ளது. இதையடுத்து ஓட்டுநர் பிரேக் அடிக்கவே, பேருந்தின் பின்பக்க ஆக்சல் துண்டாகி தனியாக விழுந்த நிலையில், பேருந்து நிலை தடுமாறி சாலையோரத்தில் இடதுபுறமாக சாய்ந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் கிரேன் மூலம் விபத்தில் சிக்கிய பேருந்து அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.