நாளை முதல் சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

சத்துணவு ஊழியர்களின் போராட்ட அறிவிப்பால் பள்ளி மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட உள்ளனர்.;

Update:2026-01-19 15:43 IST

FILEPIC

சென்னை,

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ மாணவிகளுக்காக சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில், சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் என பல்லாயிரக் கணக்கான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக சத்துணவுத் துறையில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக பல ஆண்டுகளாக உள்ளன. தமிழகத்தில் ஒரே இடத்தில் சமைத்து இரண்டு, மூன்று மையங்களுக்கு உணவு வழங்கும் நடைமுறையும் உள்ளது. இதனால், சத்துணவுப் பணியாளர்கள் கடும் மன உளைச்சலில் உள்ளனர். அண்மைக் காலமாகவே சத்துணவு ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிட்டோரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தமிழக அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக உருவெடுத்தது. குறிப்பாக தூய்மை பணியாளர்களின் பணி நிரந்தர போராட்டம் தமிழகத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தது.

இதையடுத்து பழைய ஓய்வூதியத் திட்டம், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ சங்கங்கள் உள்ளிட்ட சங்கங்கள் போராட்டங்களை நடத்தின. திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி இந்த போராட்டங்கள் நடைபெற்றது அவர்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்த்தது.

இந்தநிலையில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் , குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7 ஆயிரத்து 850 ரூபாய் வழங்க வேண்டும், பணிக்கொடையாக 5 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில், பகுதி நேர ஆசிரியர் மற்றும் இடைக்கால ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஏற்று தமிழக அரசு சில அறிவிப்புகளை வெளியிட்டது. ஆனால், சத்துணவு ஊழியர்களுக்கு எந்த விதமான அறிவுப்புகளும் வெளியாக இல்லை. இதனால், அவர்கள் மன வேதனையில் உள்ளனர்.

தமிழ்நாடு அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட சத்துணவு ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். காலமுறை ஊதிய உயர்வு, பணிக்கொடை உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் 71,000 பேர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் சத்துணவு ஊழியர்களின் போராட்ட அறிவிப்பால் பள்ளி மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட உள்ளனர். எனவே, அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்