காதலனுடன் வீடியோ காலில் பேசியபடியே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை... கடலூரில் பரபரப்பு
கல்லூரி மாணவி செல்போன் விற்பனை கடையில் பகுதி நேர ஊழியராக பணி புரிந்து வந்தார்.;
கடலூர்,
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த எருமனூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் தர்ஷினி (வயது 18). விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். மேலும் அவர், விருத்தாசலம் ஜங்ஷன் சாலை பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு செல்போன் விற்பனை கடையில் பகுதி நேர ஊழியராகவும் பணி புரிந்து வந்தார். மாணவி தர்ஷினி வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாணவி தர்ஷினி செல்போன் கடையில் நேற்று காலை பணியில் இருந்தார். அப்போது தர்ஷினி தனது காதலனுடன் செல்போன் மூலம் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வீடியோ காலில் பேசிக்கொண்டே கடையின் பின்புறமாக சென்ற தர்ஷினி, அங்கு உள்ள ஒரு அறையில் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனை வீடியோ காலில் பார்த்துக் கொண்டே இருந்த அந்த வாலிபர் இணைப்பை துண்டித்துவிட்டு, உடனடியாக கடையில் இருந்த ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதைகேட்டு பதறிய ஊழியர்கள் ஓடிச் சென்று பார்த்தபோது தர்ஷினி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.
உடனே இதுபற்றி விருத்தாசலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தர்ஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்ஷினி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.