ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க குழு அமைப்பு
ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
பண்டிகை, விழா காலங்களின்போது சொந்த ஊருக்கு சென்று உற்றார்-உறவினர்கள், நண்பர்களை சந்தித்து, மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்ற ஆவல், ஆர்வம் பெரும்பாலானவர்களுக்கு மேலோங்கி இருக்கிறது. எப்படியாவது ஊருக்கு சென்று விட வேண்டும். பஸ்சில் இடம் கிடைத்தால் போதும் என்ற நிர்ப்பந்தத்துக்கு பயணிகள் தள்ளப்படுகின்றனர்.
மக்களின் இந்த இக்கட்டான சூழ்நிலையை ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர். எனவே வழக்கமான நாட்களை காட்டிலும் பண்டிகை, விழா காலங்களின்போது 'டிக்கெட்' கட்டணம் பயணிகளை பதற வைக்கும் வகையில் உயர்த்தப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
தற்போது சரஸ்வதி பூஜை (அக்.1) காந்தி ஜெயந்தி (அக்.2-ந்தேதி) என தொடர் அரசு விடுமுறை வருவதால் வருகிற 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று ஆம்னி பஸ்களில் பயணம் செய்யலாம் என்று எதிர்பார்த்து 'டிக்கெட்' முன்பதிவு செய்ய திட்டமிட்டுள்ள பயணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் கட்டணம் 2 மடங்கிற்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது.
பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ்களின் டிக்கெட் கட்டணம் பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் சீசனாகவே மாறிவருகிறது. இதனை தடுக்க ஆம்னி பஸ்களின் கட்டணத்தை நிரந்தரமாக அரசு நிர்ணயிக்க வேண்டும் என பயணிகள் நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஆயுதபூஜை , விஜயதசமி மற்றும் தொடர் வார விடுமுறையை முன்னிட்டு (01.10.2025 முதல் 05.10.2025 வரை) பொதுமக்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பஸ்கள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்தால் அதனைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளர்கள் ஆகியோரைக் கொண்டு சிறப்புக்குழு அமைக்கப்பட்டு அதிகப்படியான கட்டணம் வசூல் செய்யும் மற்றும் அனுமதிக்குப்புறம்பாக இயங்கும் ஆம்னி பஸ்களை தீவிரமாக சோதனை செய்து அபராதம் விதித்தும், வாகனங்களை சிறைபிடித்தும் வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.