கோவையில் பரபரப்பு: லிப்ட் அறுந்து விழுந்ததில் ஊழியர் பலி
பொருட்களை அனுப்ப சென்ற சுரேஷ் நீண்ட நேரம் திரும்பி வராததால் உடன் பணியாற்றிய ஊழியர்கள் அவரை தேடிச் சென்றபோது அதிர்ச்சி அடைந்தனர்.;
கோவை,
கோவை ஒப்பணக்கார வீதியில் முகமது தவ்பிக் என்பவருக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட் இயங்கி வருகிறது. இதில், சுரேஷ் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இன்று காலை 10 மணிக்கு கடை திறக்கப்பட்டதும், மளிகை பொருட்களை லிப்ட் மூலம் எடுத்துச் செல்லும் பணியில் சுரேஷ் ஈடுபட்டார்.
இது பொருட்களை எடுத்து செல்லும் லிப்ட் என்பதால், ஆட்கள் யாரும் பயணம் செய்ய அனுமதி இல்லை. இந்த நிலையில், பொருட்களை அனுப்ப சென்ற சுரேஷ் நீண்ட நேரம் திரும்பி வராததால் உடன் பணியாற்றிய ஊழியர்கள் அவரை தேடிச் சென்றபோது அதிர்ச்சி அடைந்தனர்.
தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் சுரேஷ் இறந்து கிடந்தார். பொருட்கள் எடுத்துச் செல்லும் லிப்ட்டும் அறுந்து கிடந்தது. எனவே, லிப்ட் விழுந்து சுரேஷ் இறந்ததாக கருதப்படுகிறது. உடனடியாக, இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள், லிப்ட் நிறுவன ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக இயங்கும் ஒப்பணக்கார வீதியில் லிப்ட் அறுந்து விழுந்து ஊழியர் ஒருவர் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.