எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை குறித்து விமர்சனம்: ஆதவ் அர்ஜுனா வீடியோவால் பரபரப்பு
ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு நடிகர் பாலாஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
சமூக வலைத்தளத்தில் த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்னாஜுனாவும், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தும் புல்வெளியில் பேசியபடியே நடந்து செல்லும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த புல்வெளியில் நடந்தபடியே வரும் ஆதவ் அர்ஜூனா தமிழக அரசியல் கூட்டணி தொடர்பாக பேசுகிறார். அவருடன் வரும் புஸ்சி ஆனந்த் அதற்கு பதில் எதுவும் தெரிவிக்காமல், 'ம்.., ம்...' சொல்லியபடியே வருகிறார்.
இந்த வீடியோவில் ஆதவ் அர்ஜுனா, 'அண்ணாமலையாச்சும் 10 பேரை வச்சிக்கிட்டு, தேர்தலில் நின்னு 18, 20 சதவீதம் வாக்கு வங்கி வச்சியிருக்காரு, இங்கே எடப்பாடியை நம்பி கூட்டணிக்கு யாரும் வர்ற மாதிரி தெரியல, பா.ஜனதாவே அ.தி.மு.க.வை கூட்டணியில் இருந்து கழற்றி விடும் என்று கூறுகிறார். இதற்கு புஸ்சி ஆனந்த் பதில் ஏதும் கூறாமல் சிரித்துக்கொண்டே செல்கிறார்.
இந்த வீடியோ முழுமையாக இல்லாமல் எடிட் செய்யப்பட்டது போல் இடை, இடையே சில பதிவுகளாக வருகிறது. பா.ஜனதா, அ.தி.மு.க.வை விமர்சனம் செய்வது போல் உள்ள இந்த வீடியோ அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு நடிகர் பாலாஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நடிகர் பாலாஜி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்,
இன்றைக்கு (அதாவது நேற்று) ஒரு வீடியோ பார்த்தேன். அது மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தியது. என்னவென்றால் நமது மதிப்பிற்குரிய எடப்பாடி பழனிசாமியை, தவெகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசியுள்ளார். இதனை பொதுச்செயலாளராக இருக்கு புஸ்ஸி ஆனந்தும் இப்படி பேசக்கூடாது என ஒருவார்த்தைக் கூட கூறவில்லை. கட்சியில் நடக்கும் பிரச்சினைகளை தவெக தலைவர் விஜய் நேரடியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.