கடலூர்: 4 நிமிடங்கள்... ஒரு லட்சம் வாலா சரவெடியை வெடித்து தீபாவளி கொண்டாடிய மக்கள்
பத்து, 10 ஆயிரம் வாலா சரவெடிகளை ஒன்றாக இணைத்து, இந்த ஒரு லட்சம் வாலா சரவெடியை வெடித்துள்ளனர்.;
கடலூர்,
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, மக்கள் காலையிலேயே எழுந்து, குளித்து முடித்து, புதிய ஆடைகளை உடுத்தி, இனிப்பு மற்றும் பலகாரங்களை உண்டு, வாழ்த்துகளை பரிமாறி கொண்டு, தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினர். இதேபோன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளையும் வெடித்து மகிழ்ந்தனர்.
தீபாவளியை முன்னிட்டு, பொதுமக்கள் பருத்தி ஆடைகளை அணிந்து பட்டாசுகளை வெடிக்கும்படி அரசு சார்பில் கேட்டு கொள்ளப்பட்டது. சில்க் அல்லது நைலான் உடைகளை அணிய வேண்டாம். காலணிகளை அணிந்து கொண்டு, திறந்த வெளியில் பட்டாசுகளை வெடியுங்கள் என்றும் கூறப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் கோதண்டராமபுரம் கிராமத்தில் வசித்து வரும் மக்கள் இந்த தீபாவளி பண்டிகையை ஒரு லட்சம் வாலா சரவெடியை வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடி உள்ளனர். அவர்கள் பத்து, 10 ஆயிரம் வாலா சரவெடிகளை ஒன்றாக இணைத்து, இந்த ஒரு லட்சம் வாலா சரவெடியை வெடித்துள்ளனர். தொடர்ச்சியாக 4 நிமிடம் 12 வினாடிகள் வரை அந்த சரவெடி வெடித்து முடித்தது.