தயாநிதி மாறனுக்கு நாவடக்கம் தேவை - பா.ம.க. செய்தித் தொடர்பாளர் கே. பாலு
அரசியலில் விமர்சனங்கள் செய்வதற்கு சில தகுதிகள் வேண்டும் என்று பா.ம.க. செய்தித் தொடர்பாளர் கே. பாலு தெரிவித்துள்ளார்.;
கோப்புப்படம்
சென்னை,
பா.ம.க. செய்தித் தொடர்பாளர் கே. பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் வராத தொழில் முதலீடுகளை வந்ததாகக் கூறி மோசடி செய்திருப்பதை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அம்பலப்படுத்தியுள்ள நிலையில், அது குறித்த வினாவுக்கு விடையளிக்க முடியாத திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், பா.ம.க. தலைவர் மீது தனிமனித விமர்சனத்தில் ஈடுபட்டிருக்கிறார். விமர்சனத்தை விமர்சனத்தால் எதிர்கொள்ள முடியாத தயாநிதி மாறன், அவரது அதிகாரத் திமிரை காட்ட முற்படுவது கண்டிக்கத்தக்கது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டிற்கு ரூ.11.32 லட்சம் கோடி தொழில் முதலீடுகள் வந்திருப்பதாகவும், அதன்மூலம் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்திருப்பதாகவும் திமுக பொய்ப் பரப்புரை செய்து வரும் நிலையில், அவ்வளவு முதலீடுகள் வரவில்லை என்பதையும், வெறும் 8.8 சதவீத முதலீடுகள் மட்டுமே வந்திருப்பதாகவும் புள்ளிவிவரங்களுடன் அன்புமணி ராமதாஸ் அவர்கள் ஆவணம் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்.
திமுக அரசின் பொய் முதலீடுகள் என்ற தலைப்பிலான அந்த ஆவணம் வெளியானதில் இருந்தே தங்களின் மோசடி அம்பலமாகி விட்டதால் திமுகவினர் எதை எதையோ உளறத் தொடங்கி விட்டனர்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறனிடம், திமுகவின் தொழில் முதலீட்டு மோசடிகள் குறித்து வினா எழுப்பினர். அதற்கான பதில் இருந்தால் அதை தயாநிதி மாறன் கூறியிருக்கலாம்; இல்லாவிட்டால் என்னிடம் பதில் இல்லை என்று கூறி கடந்து சென்றிருக்கலாம். ஆனால், அதை விடுத்து,‘‘அவரை முதலில் அவங்க அப்பாவை பார்க்கச் சொல்லுங்க’’ என்று கூறியுள்ளார். இது அநாகரீகத்தின் உச்சம். திமுகவினரின் ரத்தத்தில் ஊறிய கலாச்சாரத்தை அப்படியே அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
தயாநிதி மாறனின் குடும்பத்திலும், அவர் சார்ந்த திமுகவின் முதல் குடும்பத்திலும் கடந்த 20 ஆண்டுகளில் நடந்த மோதல்கள் பற்றி பொதுவெளியில் பேசக் கூட முடியாது. அந்த அளவுக்கு அந்த மோதல்களால் அருவருக்கத்தக்க நிகழ்வுகள் நடந்தன. தமது முதுகில் இருக்கும் சாக்கடையைத் துடைக்காமல் எங்கள் தலைவர் மீது தயாநிதி மாறன் பாய்வது அவரது இயல்பையும், குணத்தையும் காட்டுகிறது.
2007-ஆம் ஆண்டில் திமுகவின் முதல் குடும்பத்தில் உள்ளவர்களின் அதிகாரப் பசியைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் தயாநிதி மாறனின் குடும்ப நாளிதழில் ஒரு தரப்புக்கு ஆதரவாக கருத்துக் கணிப்பு வெளியிடப் பட்டதையும், அதனால் ஆத்திரம் அடைந்த எதிர்த்தரப்பு மதுரை தினகரன் அலுவலகத்தை தீயிட்டு எரித்ததையும், அதில் அப்பாவி ஊழியர்கள் மூவர் உயிருடன் கருகி இறந்ததையும் தமிழ்நாடு இன்னும் மறந்து விடவில்லை.
மதுரையில் தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டதற்கு அடுத்த நாள் தினகரன் நாளிதழின் முதல் பக்கத் தலைப்பு செய்தியில், ‘ரவுடி அழகிரி’ என்று தலைப்பிட்டு செய்திகள் வெளியிடப்பட்டதை அனைவரும் அறிவர். அதன்பின் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, பெற வேண்டியதைப் பெற்று, கொஞ்சமும் வெட்கமின்றி, யாரை ரவுடி என்று மாறன் குடும்பம் விமர்சித்ததோ, அவரையே கட்டித் தழுவி, ‘‘ இதயம் இனித்தது, கண்கள் பனித்தன’’ என்று வசனம் பேசிய வரலாறை எல்லாம் தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் மறக்கவில்லை.
திமுகவின் முதல் குடும்ப மோதலைத் தொடர்ந்து கட்சியின் உயர்நிலை செயல்திட்டக்குழு கூடி விவாதித்து தயாநிதி மாறன் அமைச்சரவையிலிருந்தும், திமுகவிலிருந்தும் நீக்கப்பட்டது இன்னும் நினைவிலிருந்து அகல வில்லை. மாறன் குடும்ப நிறுவனங்களில் தங்களுக்குரிய பங்கை முழுதாக தராமல் ஏமாற்றி விட்டார்கள் என்று அன்றைய முதல்-அமைச்சர் கலைஞர் குற்றஞ்சாட்டியதும், அதன் பின் மாறன் குடும்பத்தை மிரட்டி பெரும் தொகை வசூலிக்கப்பட்டதும் வரலாறு.
அவ்வளவு ஏன்... சில வாரங்களுக்கு முன் தமது மூத்த சகோதரர் தங்களின் குடும்ப சொத்துகளில் தமக்கு உரிய பங்கை தராமல் ஏமாற்றி விட்டார் என்று சொந்த சகோதரனுக்கே வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியது தயாநிதி மாறனுக்கு மறந்து விட்டதா? அதைத் தொடர்ந்து நடந்த திரைமறைவு பேரங்களுக்குப் பிறகு அந்த வழக்கறிஞர் நோட்டீஸ் திரும்பப் பெறப்பட்டது நினைவில்லையா? திமுகவின் முதல் குடும்பத்தில் நடந்த இந்த மோதல்கள் குறித்தெல்லாம் விவாதம் நடத்துவதற்கு தயாநிதி மாறன் தயாராக இருக்கிறாரா?
அரசியலில் விமர்சனங்கள் செய்வதற்கு சில தகுதிகள் வேண்டும். ஆனால், அவற்றின் ஒன்று கூட தயாநிதி மாறனுக்கு இல்லை. தமிழ்நாட்டில் நாகரீகமான, வளர்ச்சி அரசியலை (Decent and Development Politics) செய்ய வேண்டும் என்று எங்கள் தலைவர் எங்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். அதைத் தான் நாங்கள் பின்பற்றி வருகிறோம்.
தயாநிதி மாறனுக்கு அவரது பாணியில் பதிலடி கொடுக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தால் அவரால் தாக்குபிடிக்க முடியாது; அத்தகைய அரசியலை செய்வதற்கும் எங்களுக்கு விருப்பமில்லை. இதை உணர்ந்து தயாநிதி மாறன் இனியாவது நாவடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.