தவெக மாவட்ட செயலாளருக்கு 24ம் தேதி வரை நீதிமன்ற காவல்

எஸ்.எம்.நிர்மல்குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர்.;

Update:2025-10-13 08:53 IST

கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக தவெக கரூர் நகர பொறுப்பாளர் பவுன்ராஜையும் போலீசார் கைது செய்துள்ளனர். கரூர் கூட்ட நெரிசல் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தவெக மாநில இணை செயலாளர் நிர்மல் குமார் உள்பட சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை சமீபத்தில் சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, தவெக தலைவர் விஜய் குறித்து கண்டனங்களை முன்வைத்தார். இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி குறித்து சமூகவலைத்தளத்தில் அவதூறு கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. அதேவேளை, அவதூறுகள் பரப்பியவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்படுகினறன.

அந்த வகையில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி குறித்து சமூகவலைதளத்தில் அவதூறாக கருத்து பதிவிட்ட தவெக திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.நிர்மல்குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட எஸ்.எம்.நிர்மல்குமார் நேற்று திண்டுக்கல் ஜே3 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 24ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து எஸ்.எம்.நிர்மல்குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.  

Tags:    

மேலும் செய்திகள்