தீபாவளி பண்டிகை: ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.10 கோடிக்கு பால்கோவா விற்பனை
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது.;
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா தனிச்சுவை கொண்டது என்பதால் மிகவும் பிரசித்தி பெற்றது. இப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட பால்கோவா உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுப்பகுதிகளுக்கு வருபவர்கள் இங்கு விற்கப்படும் பால்கோவாவை வாங்கிச்சென்று தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்குவது வழக்கம்.
இத்தனை பிரபலமான ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த அங்கீகாரம் கிடைத்ததில் இருந்து இப்பகுதி உற்பத்தி நிலையங்களில் பால்கோவாவின் விற்பனை அதிகரித்து உள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து பால்கோவா ஆர்டர்கள் அதிகளவில் குவிந்தன. இதனால் கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் பால்கோவா உற்பத்தி தீவிரமாக இருந்தது. மேலும் வாடிக்கையாளர்களுக்காக கருப்பட்டி பால்கோவா, நாட்டுச்சர்க்கரை பால்கோவா, பால் கேக், பால் அல்வா என பலவிதமான புதிய வகைகளில் பால்கோவா தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தன.
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு அதிக மவுசு இருப்பதால் வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டது. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா ஏற்றுமதியாளர் திருப்பதிராஜ் கூறுகையில், இந்த ஆண்டு தீபாவளியையொட்டி பால்கோவா விற்பனை அதிகரித்து உள்ளது. ஆர்டர்கள் அதிகளவில் வந்ததால் பால்கோவா உற்பத்தியில் மும்முரமாக ஈடுபட்டு இருந்தோம். தீபாவளியையொட்டி கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.10 கோடிக்கு பால்கோவா விற்பனையானது என்றார்.