தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்; தமிழகத்தில் 13 இடங்களில் தீ விபத்து பதிவு

சென்னையில் மட்டுமே 3 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.;

Update:2025-10-20 21:45 IST

சென்னை,

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, மக்கள் காலையிலேயே எழுந்து, குளித்து முடித்து, புதிய ஆடைகளை உடுத்தி, இனிப்பு மற்றும் பலகாரங்களை உண்டு, வாழ்த்துகளை பரிமாறி கொண்டு, தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினர். இதேபோன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளையும் வெடித்து மகிழ்ந்தனர்.

எனினும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தீ விபத்து ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, பல்வேறு மருத்துவமனைகளிலும் தீபாவளி தீக்காய சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பட்டாசு வெடித்தது உள்ளிட்டவற்றால், 13 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது என தீயணைப்பு துறை தெரிவித்து உள்ளது. இவற்றில் சென்னையில் மட்டுமே 3 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ மருத்துவமனைக்கு இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, பொதுமக்கள் பருத்தி ஆடைகளை அணிந்து பட்டாசுகளை வெடிக்கும்படி வேண்டுகோளாக கேட்டு கொள்கிறேன். அதுவே சிறந்தது. சில்க் அல்லது நைலான் உடைகளை அணிய வேண்டாம். காலணிகளை அணிந்து கொண்டு, திறந்த வெளியில் பட்டாசுகளை வெடியுங்கள் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்