மருத்துவர்கள் இல்லாமல் மருத்துவமனைகளை கட்டும் தி.மு.க. அரசு - ஓ. பன்னீர்செல்வம் கண்டனம்

மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.;

Update:2025-06-23 16:43 IST

கோப்புப்படம் 

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

ஒரு நாடு வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டுமென்றால், அந்த நாட்டில் உள்ள மக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அந்த நாட்டில் உள்ள மக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், அந்த நாட்டில் மருத்துவமனைகளோடு, மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும். ஏனென்றால், ஒட்டுமொத்த மக்களின் உடல் நலப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதிலும், நோய்களைத் தடுப்பதிலும், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் மருத்துவர்கள். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தி.மு.க. ஆட்சியில் இதற்கு முற்றிலும் முரணான நிலை நிலவுகிறது.

அரசு மருத்துவமனைகளுக்கான கட்டடங்களை கட்டும் தி.மு.க. அரசு, அங்கு புதிதாக மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்களை நியமிப்பதில்லை. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், வேலூர் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பென்லேன்ட் அரசு மருத்துவமனை 150 கோடி ரூபாய் மதிப்பில் பல்நோக்கு மருத்துவமனையாக கட்டப்படும் என்று தி.மு.க. அரசால் அறிவிக்கப்பட்டு இன்று அதற்கான பணிகள் முடிவுற்று, அதனை முதல்-அமைச்சர் நாளை மறுநாள் திறக்க இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. ஆனால், இந்த மருத்துவமனைக்காக புதிதாக மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை என்றும், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலத்துறையை பென்லேன்ட் மருத்துவமனைக்கு இட மாற்றம் செய்ய உள்ளதாகவும் அரசு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேற்படி மருத்துவமனை மட்டுமல்லாமல், புதிதாக மேம்படுத்தி கட்டப்பட்ட சேலம், திருநெல்வேலி, கிண்டி போன்ற அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை என்றும், உரிய ஊதியம் மற்றும் பதவி உயர்வினைத் தராமல் அரசு மருத்துவர்களை தி.மு.க. அரசு புறக்கணிக்கிறது என்றும், மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது அவசியம் என்றும் அரசு மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதனை தி.மு.க. அரசு கண்டு கொள்வதில்லை. மாறாக, போராடுபவர்கள் மீது கைது நடவடிக்கையினை மேற்கொள்கிறது.

சென்னை, கிண்டியில் 750 படுக்கைகள் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனை 487 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என்றும், இதற்கான பணிகள் செப்டம்பர் மாதம் துவங்கப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார். இந்த மருத்துவமனைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் நியமிக்கப்படுவார்களா என்பது தெரியவில்லை.

சமூகத்தின் முக்கிய அங்கமாக இருப்பவர்கள் மருத்துவர்கள் என்ற நிலையில், மருத்துவர்களை நியமனம் செய்யாமல் மருத்துவமனைகளை கட்டுவது என்பது விழலுக்கு இறைத்த நீர் போல அமைந்துள்ளது. தி.மு.க. அரசின் இந்தச் செயல் அரசு பணத்தை வீணடிப்பதற்குச் சமம்.

முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, அரசு மருத்துவமனைகள் துவக்கப்படும்போதே அங்கு அதற்குரிய மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்களை நியமிக்கவும், மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்கவும், வேலூர் பென்லேன்ட் மருத்துவமனையில் புதிதாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்களை நியமனம் செய்யவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்