பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு திறனில்லாத திமுக ஆட்சி: நயினார் நாகேந்திரன் கண்டனம்
பெண்கள் பாதுகாப்பை அச்சுறுத்தும் கயவர்கள் தொடர்ந்து திமுகவினராகவே இருப்பது ஏன்? என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்;
சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சென்னை கோயம்பேட்டில் 9 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதற்காக திமுக நிர்வாகி உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற செய்தியைப் படித்தீர்களா?
அண்ணா பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் வன்புணர்வு செய்த ஞானசேகரன், அரக்கோணம் கல்லூரி மாணவியைக் கட்டாயப்படுத்தி திருமணம் புரிந்து கொடுமை செய்த தெய்வச்செயல், தற்போது 15 வயது சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ரமேஷ் என பெண்கள் பாதுகாப்பை அச்சுறுத்தும் கயவர்கள் தொடர்ந்து திமுகவினராகவே இருப்பது ஏன்?
"திமுககாரன்" எனும் ஒற்றை அடையாளமே பெண்களையும் சிறுமிகளையும் சிதைப்பதற்கு திராவிட மாடல் ஆட்சியில் வழங்கப்பட்ட தகுதியா? திமுகவின் மூத்த அமைச்சர்களே சிறிதும் நாகரிகமின்றி பெண்களைத் தரக்குறைவாக விமர்சித்து வசைபாடும் போது கழகக் கண்மணிகள் பெண்களின் பாதுகாப்பைக் களவாடுவதில் ஆச்சரியமில்லையோ?
Out of control-இல் இயங்கும் திமுக உடன்பிறப்புகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கி பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்குத் திறனில்லாத இந்த ஆட்சிதான் பொற்கால ஆட்சியா? வெட்கக்கேடு. என தெரிவித்துள்ளார் .