விழுப்புரம்: சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
வாலிபரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.;
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் தாலுகா சஞ்சீவிராயன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் மகன் ராஜேந்திரன் என்ற ராஜி (வயது 34). ஆட்டோ மொபைல்ஸ் கடை ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்த இவர் கடந்த 29.1.2019 அன்று 15 வயதுடைய சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி தனது வீட்டின் அருகே உள்ள நிலத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் அந்த சிறுமி, ராஜேந்திரனிடம் சென்று தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி கேட்டார். அதற்கு அவர் திருமணம் செய்ய மறுத்ததுடன் அச்சிறுமியை அருகில் இருந்த கிணற்றில் தள்ளி கொலை செய்ய முயன்றார்.இதுகுறித்து சிறுமியின் தாய், அவலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் ராஜேந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை, விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி வினோதா, குற்றம் சாட்டப்பட்ட ராஜேந்திரனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார். இதையடுத்து ராஜேந்திரனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.