தமிழ்நாட்டை அழிவுப் பாதைக்கு தி.மு.க. அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது: ஓ.பன்னீர்செல்வம்
தமிழ்நாட்டின் தற்போதைய நிதிநிலைமை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.;
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;
சட்டம்-ஒழுங்கு சீரழிவு, போதைப் பொருட்கள் நடமாட்டம், மது விற்பனை, கள்ளச்சாராய விற்பனை, பாலியல் பலாத்காரம் போன்றவற்றில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்கிய தி.மு.க., கடன் பெறுவதிலும் இந்தியாவிலேயே தமிழ்நாட்டை தொடர்ந்து முதல் மாநிலமாக ஆக்கியிருப்பதாக பாரத ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டை அழிவுப் பாதைக்கு தி.மு.க. அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. இதுதான் தி.மு.க. அரசின் கடந்த நான்காண்டு கால சாதனை.
அரசுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கூடுதல் வருவாய் கிடைத்தும், 5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்றும், அரசு ஊழியர்கள் அதிருப்தி, ஆசிரியர்கள் அதிருப்தி, சத்துணவு ஊழியர்கள் அதிருப்தி, அங்கன்வாடி ஊழியர்கள் அதிருப்தி, மருத்துவர்கள் அதிருப்தி, செவிலியர்கள் அதிருப்தி, வணிகர்கள் அதிருப்தி, குறு சிறு தொழிலதிபர்கள் அதிருப்தி, தொழில்முனைவோர் அதிருப்தி, பொதுமக்கள் அதிருப்தி, தொழிலாளர்கள் அதிருப்தி, விவசாயிகள் அதிருப்தி என அனைத்துத்தரப்பு மக்களும் அதிருப்தியில் உறைந்து போயுள்ளனர்.
தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தி.மு.க., தமிழ்நாட்டின் தற்போதைய நிதிநிலைமை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்."
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.