தி.மு.க. அரசை கண்டித்து அ.ம.மு.க. ஆர்ப்பாட்டம்-டி.டி.வி.தினகரன் அறிவிப்பு

தி.மு.க. அரசை கண்டித்து வரும் 4ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.;

Update:2025-07-02 17:26 IST

கோப்புப்படம்

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜிக்குமார் அவர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அஜித்குமார் அவர்களின் உடலில் இருக்கும் காயங்களை விளக்கும் அவரின் உடற்கூராய்வு அறிக்கை காவல்துறையினரின் காண்டுமிராண்டித் தனத்தை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் அமைந்திருக்கிறது.

காலதாமதமாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை, சி.சி.டி.வி. காட்சிகள் மற்றும் சாட்சியங்கள் அழிப்பு, காவல்துறையினருடன் தி.மு.க-வினர் கூட்டு சேர்ந்து நடத்திய பேரம் என அத்துனை சட்டவிரோதச் செயல்களையும் கண்டறிந்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சாட்டையை சுழற்றிய பின்பே, வழக்கின் விசாரணையை சி.பி.ஐ க்கு மாற்றியிருக்கிறது தி.மு.க அரசு.

காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நான்கு ஆண்டுகளாக தூக்கத்தில் இருந்துவிட்டு தற்போது "நடக்க கூடாதது நடந்துவிட்டது. SORRY என்று கூறுவது வெட்கக்கேடானது.

பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, அவர்களின் புகார்களுக்கு உரிய தீர்வு கண்டு, சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க வேண்டிய காவலர்களே, சட்டத்தை தன்னிச்சையாக கையில் எடுத்துக் கொண்டு விசாரணை எனும் பெயரில் கண்ணியமற்ற முறையிலும், காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்வதே அடுத்தடுத்த காவல் மரணங்கள் அரங்கேற முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

காவல் மரணங்கள் தொடர்பான திரைப்படங்களை பார்த்துவிட்டு காவல் நிலைய மரணங்களே இல்லை என்ற நிலையை தமிழகம் அடைய வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒருபுறம் முழங்கிக் கொண்டிருக்க, மறுபுறம் தி.மு.க ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 24 காவல் மரணங்கள் அரங்கேறியுள்ளன.

எனவே, திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் அவர்களின் மரணத்திற்கு நீதி வேண்டியும், விசாரணை எனும் பெயரில் காவல்நிலையங்களில் அடுத்தடுத்து அரங்கேறும் காவல் மரணங்களை தடுக்கத் தவறிய தி.மு.க அரசைக் கண்டித்தும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வருகின்ற 04.07.2025 வெள்ளிகிழமையன்று மாலை 4 மணியளவில் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் சந்தை திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

சிவகங்கை மாவட்டக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இக்கண்டனப் பொதுக்கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள். நிர்வாகிகள், மாநில, மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர். வார்டு, வட்ட, கிளைக்கழகம் மற்றும் சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்