தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடா? திருமாவளவன் விளக்கம்
குறிப்பிட்ட சமூகத்தின் தொழிலாக நிரந்தர படுத்தி விடக்கூடாது என்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.;
தூத்துக்குடி
தூத்துக்குடியில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,
குடியரசு துணைத் தலைவர் தேர்தலை பா.ஜனதா அரசு தினித்து உள்ளது. தமிழர் ஒருவரை குடியரசு துணைத் தலைவர் ஆக்குவோம் என்று ஒரு சிலர் குரல் எழுப்ப ஆரம்பித்து உள்ளனர். இது தமிழ்நாட்டுக்கான துணைத் தலைவர் பதவி அல்ல. இந்தியாவுக்கான துணைத் தலைவர் பதவி. எனவே இதில் தமிழர் என்கிற அடையாளம் முன்னிறுத்துவதில் எந்த பலனும் கிடையாது. பா.ஜனதாவா, பா.ஜனதா அல்லாத ஜனநாயக சக்திகளா என்று தான் அணுக வேண்டி உள்ளது.
சுதந்திரமாக அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கக் கூடிய ஒருவரை குடியரசுத் துணைத் தலைவராக தேர்வு செய்ய வேண்டும். எனவே, சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்கிறோம். சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவளிக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இ-மெயில் மூலம் கடிதம் அனுப்பி உள்ளேன். இந்த தேர்தல் வழக்கமான சராசரியான தேர்தலாக அல்லாமல், தன்கருக்கு நேர்ந்த நெருக்கடியை கருத்தில் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக சிந்தித்து சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டும்.
தூய்மை பணியாளர்கள் விஷயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இரட்டை நிலைப்பாட்டை முன்வைக்கவில்லை. ஒரே நிலைப்பாடு தான். அதேவேளையில் மாற்று வழியை தொலைநோக்கு பார்வை அடிப்படையில் முன்வைக்கிறோம். அந்த தொழிலையே ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்காக நிரந்தரப்படுத்தி விடக் கூடாது என்பதற்காக தான், மாற்றுக் கருத்தை முன்வைத்தோம். அதை புரிந்து கொள்ளாமல் தூய்மை பணியாளர்களுக்கு எதிரான கருத்து என்று தவறான சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. இது அதிர்ச்சியாக உள்ளது.
குறிப்பிட்ட சமூகத்தின் தொழிலாக நிரந்தர படுத்தி விடக்கூடாது என்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். தொழில்நுட்பத்தை கற்றுக் கொண்டவர்கள் யாராக இருந்தாலும் அந்த பணியை செய்ய ஏதுவான சூழலை உருவாக்க வேண்டும் என்று தொலைநோக்கு பார்வையில் கருத்தை முன் வைக்கிறோம். 31 நாட்கள் சிறையில் இருந்தால் அமைச்சர்கள் பதவி பறிக்கும் புதிய சட்டம் மிகவும் கொடிய சட்டம். பாசிசத்தின் உச்சம். இதனை மிக வன்மையாக கண்டிக்கிறோம். இந்த சட்டத்தை அறிமுகப்படுத்தியதே தவறு. பா.ஜனதா அரசு பாசிச அரசு என்பதற்கு இந்த சட்டமே ஒரு சாட்சி.
இவ்வாறு அவர் கூறினார்.