பூந்தமல்லி-போரூர் இடையே டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் இயக்கம்: அடுத்த மாதம் நிபுணர் குழு ஆய்வு

பூந்தமல்லி - போரூர் இடையே டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயிலின் 4-வது கட்ட சோதனை ஓட்டம் நடைபெற இருக்கிறது.;

Update:2025-06-19 00:11 IST

கோப்புப்படம்

சென்னை,

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் 118.9 கிலோ மீட்டர் தொலைவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இயக்குவதற்கான டிரைவர் இல்லாத முதல் மெட்ரோ ரெயில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை வந்தது.

இந்த ரெயில் கடந்த மார்ச் 20-ந்தேதி பூந்தமல்லி - போரூர் இடையே முதல் சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தப்பட்டது. சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் வெற்றிகரமாக இயக்கி பார்க்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ஏப்ரல் 28-ந்தேதி 2-ம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. போரூரில் இருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை கீழ்மட்ட பாதையில் கடந்த 6-ந்தேதி சோதனை ஓட்டம் நடத்திப் பார்க்கப்பட்டது. சுமார் 10 கி.மீ. தூரம் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

இதற்கிடையே, பூந்தமல்லி - போரூர் இடையே உயர்மட்ட பாதையிலும் அவ்வப்போது சோதனை நடந்து வருகிறது. இந்த வழித்தடத்தில் மொத்தம் 10 ரெயில் நிலையங்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில், ஜூலை 3-வது வாரத்தில் பூந்தமல்லி - போரூர் இடையே டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயிலின் 4-வது கட்ட சோதனை ஓட்டம் நடைபெற இருக்கிறது. அப்போது, மத்திய ரெயில்வேயின் ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலைகள் அமைப்பின் நிபுணர் குழு (ஆர்.டி.எஸ்.ஓ.) டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயிலை இயக்கி சரிபார்க்க உள்ளது.

அந்த குழுவினரின் அனுமதி கிடைத்த பின்னர் ரெயில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது. அதன்படி, இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்த வழித்தடத்தில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக மெட்ரோ ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்