துரை வைகோ - மல்லை சத்யா சமரசம்: வைகோ கூறியது என்ன..?
ஒற்றுமையாக இருந்து இயக்கத்தை வலுப்படுத்துவோம் என இருவரும் தெரிவித்துள்ளதாக வைகோ கூறினார்.;
சென்னை,
மதிமுக பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுடனான மோதல் காரணமாக, கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ நேற்று அறிவித்தார். கட்சிக்கு எதிராக மல்லை சத்யா ஆதரவாளர்கள் செயல்படுவதாகக் கூறி பதவி விலகுவதாக துரை வைகோ அறிவித்திருந்தார்.
இந்த பரபரப்பான சூழலில் மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டம் அவைத்தலைவர் அர்ஜுன் ராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த சூழலில், சென்னை, எழும்பூரில் நடைபெற்ற மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் 40 மாவட்டச் செயலாளர்கள் துரை வைகோவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. மதிமுகவில் அமைப்புரீதியாக மொத்தம் 66 மாவட்ட செயலாளர்கள் உள்ள நிலையில் 40 மாவட்டச் செயலாளர்கள், துரை வைகோ பொறுப்பில் இருந்து விலகக்கூடாது என்று பேசி உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்த கூட்டத்தில் பேசிய மல்லை சத்யா, "நிர்வாகிகள் மூலம் வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியை விட்டு விலக்கி விடுங்கள். துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்கிறேன். கடைசி வரை வைகோ தொண்டனாக இருந்து விட்டுப் போகிறேன். துரை வைகோ அரசியல் வரவேண்டும் என்று முதன் முதலில் கூறியது நான்தான். கட்சி விரோத நடவடிக்கையில் நான் ஈடுபடவில்லை. அப்படி ஏதாவது கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதை நிரூபித்தால் என் மீது நடவடிக்கை எடுக்கலாம். கட்சிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பேசுவது தான் இங்கு முக்கிய பிரச்சனையாக உள்ளது" என்று கூறினார்.
இதனைத்தொடர்ந்து துரை வைகோ பேசுகையில், "கட்சி நலனுக்காகத்தான் பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவுக்கு வந்தேன். தொண்டர்கள், நிர்வாகிகள் வற்புறுத்தல் காரணமாக தான் நான் கட்சி பணிகளில் செயல்பட தொடங்கினேன். மதிமுக தொண்டர்கள் அனைவரும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக நான் செயல்பட்டு வருகிறேன்" என்று கூறினார்.
இந்த நிலையில் துரை வைகோவையும் மல்லை சத்யாவையும் வைகோ சமாதானப்படுத்திவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் கட்சி பணிகளை தொடருமாறும் வைகோ அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து ராஜினாமா முடிவை வாபஸ் பெறுவதாக துரை வைகோ அறிவித்தார்.
இதனிடையே கவர்னர் ஆர்.என்.ரவியைக் கண்டித்தும் அவரை நீக்கக் கோரியும் ஏப்ரல் 26 ஆம் தேதி மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் வக்பு சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் ஏப்ரல் 26ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பன உள்ளிட்ட 9 தீர்மானங்கள் மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "நிர்வாகக் குழு கூட்டத்தில் எல்லோரும் தங்கள் கருத்துகளை கூறினார்கள்.
துரை வைகோவும், மல்லை சத்யாவும் மனம் திறந்து பேசினார்கள். மதிமுகவுக்கும், துரை வைகோவுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்று மல்லை சத்யா கூறினார். இனி இதுபோன்ற சூழலுக்கு இடம் கொடுக்க போவதில்லை என மல்லை சத்யா உறுதி அளித்துள்ளார். ஒற்றுமையாக இருந்து இயக்கத்தை வலுப்படுத்துவோம் என இருவரும் தெரிவித்துள்ளனர். இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி, கைக்குலுக்கி, "நாங்கள் இணைந்து ஒற்றுமையாக பணியாற்றுவோம்" என்ற உறுதியை கொடுத்துள்ளனர்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய துரை வைகோ, "ஜனநாயக இயக்கத்தில் கருத்து வேறுபாடு என்பது இயல்பானது; நீர் அடித்து நீர் விலகாது, மல்லை சத்யா என் தந்தையை போன்றவர். மல்லை சத்யாவின் அரசியல் வாழ்க்கைக்கு நான் உறுதுணையாக இருப்பேன். மீண்டும் முதன்மை செயலாளராக தொடர்கிறேன். நடந்தது நடந்தவையாகவே இருக்கட்டும், நடப்பவை நல்லதாக இருக்கட்டும்" என்று கூறினார்.
பின்னர் பேசிய மல்லை சத்யா, "எனது நடவடிக்கைகள் துரை வைகோவின் மனதை காயப்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். துரை வைகோ தொடர்ந்து முதன்மை செயலாளராக பணியாற்ற வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.