வடகிழக்கு பருவமழை எதிரொலி: தமிழகத்தில் 90 அணைகளில் 196 டி.எம்.சி. தண்ணீர் சேமிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் 641 ஏரிகளில் 157 முழுமையாக நிரம்பியது.;

Update:2025-10-23 07:28 IST

சென்னை,

தமிழகத்தில் தொடங்கிய வடகிழக்கு பருவமழையால் பரவலாக மாநிலம் முழுவதும் மழை பெய்து வருகிறது. நீர்தேக்கங்களுக்கு தண்ணீர் வரத்தும் இருந்து வருகிறது. நீர்வள துறை பராமரிப்பில், 90 அணைகள் மற்றும் நீர்தேக்கங்கள் உள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி. ஆகும்.

இதில், மேட்டூர், பவானிசாகர், பரம்பிக்குளம் உள்ளிட்ட 15 முக்கிய அணைகளின் கொள்ளளவு மட்டும் 198 டி.எம்.சி. இந்த அணைகள் பல்வேறு மாவட்டங்களின் பாசனம், குடிநீர் தேவையை மட்டுமின்றி, தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவையையும் பூர்த்தி செய்கின்றன. தற்போது, 90 அணைகளிலும் சேர்த்து, 196.897 டி.எம்.சி. அதாவது 87.77 சதவீதம் தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு இன்றி வினியோகிக்கப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் 93.47 டி.எம்.சி, ஈரோடு பவானிசாகரில் 30.31, கோவை பரம்பிக்குளத்தில் 13.34 பெரியார் 6.63, சாத்தனூர் 6, வைகை 5.60, சோலையாறு 4.80, ஆழியாறு 3.77, பேச்சிப்பாறை 3.44, மணிமுத்தாறு 3.43 டி.எம்.சி. அதிகபட்சம் இருப்பு உள்ளது.

தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழை மூலம் சேமிக்கப்பட்டுள்ள தண்ணீர் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக திறக்கப்படுவதுடன், செம்பரம்பாக்கம், பூண்டி உள்ளிட்ட ஏரிகளில் இருந்து உபரி நீரும் திறந்துவிடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 14 ஆயிரத்து 141 பாசன ஏரிகள் உள்ளன. அவற்றில் 1,522 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளது. 1,842 ஏரிகள் 76 முதல் 99 சதவீதமும், 2 ஆயிரத்து 253 ஏரிகள் 51 சதவீதம் முதல் 75 சதவீதம் நிரம்பியுள்ளது.

அதேபோல், 3 ஆயிரத்து 370 ஏரிகள் 26 முதல் 50 சதவீதமும், 4 ஆயிரத்து 534 ஏரிகள் 1 முதல் 25 சதவீதமும் நிரம்பியுள்ளது. 620 ஏரிகள் நீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. அதிகபட்சமாக 2 ஆயிரத்து 40 ஏரிகள் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் 390 ஏரிகள் நூறு சதவீதம் நிரம்பி முதலிடத்தில் உள்ளது. அதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 369 ஏரிகளில் 192 முழு கொள்ளளவை எட்டியது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 697-ல் 164 ஏரிகளும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 641 ஏரிகளில் 157 முழுமையாக நிரம்பியது. இதில் அதிகபட்சமாக நெல்லை, திண்டுக்கல் மாவட்டங்களில் தலா 95 ஏரிகளில் நீரின்றி வறண்டு கிடக்கிறது. தேனி 64, மதுரை 59, நாமக்கல் 49, சேலம் 38, சிவகங்கை 34, தர்மபுரி 29, திருச்சி 28 நீர்நிலைகளில் போதிய அளவு நீரின்றி காணப்படுகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய 6 நீர்நிலைகளிலும் சேர்த்து 10 டி.எம்.சி. சேமிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக மாதம் 1 டி.எம்.சி. வீதம் வினியோகம் செய்யப்படுகிறது. அதேபோல், தற்போது ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாகவும் நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்