மழை எதிரொலி.. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.;

Update:2025-10-04 07:08 IST

கோப்புப்படம்


பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை- தேர்வாய்கண்டிகை ஏரிகள் சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. கடந்த சில நாட்களாக அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கனவே ஆந்திர மாநில கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மழை பெய்தது. இதனால் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை நிலவப்படி புழல் ஏரிக்கு வினாடிக்கு 216 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. புழல் ஏரியின் மொத்த உயரம் 21 அடியாகும். இதில் 20 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3.300 டி.எம்.சி.யில் 2.922 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது.

இதேபோல் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 690 கனஅடி தண்ணீர் வருகிறது. மொத்த கொள்ளளவான 3.231 டி.எம்.சி.யில் 2.518 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு இணைப்பு கால்வாய் வழியாக 600 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்திற்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 17 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 400 கனஅடியாக உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவான 3.645 டி.எம்.சி.யில் 1.867 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. சென்னை குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 195 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரியின் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கனஅடியில் 434 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. சோழவரம் ஏரியில் 151 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்