அரசின் ஒவ்வொரு திட்டமும் பலரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது: மு.க.ஸ்டாலின் பெருமிதம்
அரசின் ஒவ்வொரு திட்டமும் பலரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், முதல்-அமைச்சரின் காலை உணவு போன்ற திட்டங்கள் கல்வி வளர்ச்சிக்கு படிக்கட்டாக விளங்குகிறது. பிற மாநிலங்களும் தமிழக அரசின் கல்வி திட்டங்களை பின்பற்ற தொடங்கி உள்ளன.
இந்தநிலையில் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு'- தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்டம்' என்ற பெயரில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று மாபெரும் விழா நடைபெற்றது. விழாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கலந்துகொண்டார்.
நான் முதல்வன், முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், விளையாட்டுத் துறையில் சாதனையாளர்கள், சிறப்புக் குழந்தை சாதனையாளர்கள் என ஏழு திட்டங்களை உள்ளடக்கி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில், அரசின் கல்வி சார்ந்த திட்டங்களால் பயன்பெற்றவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.
அதனை தொடர்ந்து 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான புதுமைப் பெண்- தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 கல்வி ஊக்கத்தொகை வழங்குவதை ரேவந்த் ரெட்டி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து, தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
“நமது திராவிட மாடல் அரசின் ஒவ்வொரு திட்டமும் எத்தனை பேரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது என நேரில் கண்டு மலைத்துப் போனேன். கலை, விளையாட்டு எனப் பல துறையிலும் இருந்து இன்றைய சாதனையாளர்கள், நாளைய சாதனையாளர்களை வாழ்த்தி, வழிகாட்டிய இந்த நிகழ்ச்சி, "மேல ஏறி வாறோம்" எனத் தமிழ்நாட்டின் வெற்றியை அனைவருக்கும் பறைசாற்றியிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.