முகத்தை சிதைத்து கொடூரம்: பெண் கொலையில் டிரைவர் கைது.. வெளியான பரபரப்பு தகவல்கள்

முகம் சிதைந்த நிலையில் காருக்குள் பெண் பிணம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.;

Update:2025-11-08 07:14 IST

காரைக்குடி,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மருதுபாண்டியர் நகரை சேர்ந்தவர் பாண்டிக்குமார். இவருடைய மனைவி மகேசுவரி (வயது 38). இவர்களுக்கு 2 மகள்கள். மூத்த மகள் வெளிநாட்டில் மருத்துவம் படித்து வருகிறார். இளைய மகள் காரைக்குடி பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

மகேசுவரி நிலம் வாங்கி விற்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததாகவும், தனக்கு தெரிந்தவர்களுக்கு பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் காரைக்குடி அருகே ஆவுடைப்பொய்கை ஆர்.எஸ்.பதி காட்டுப்பகுதியில் அவரது காருக்குள் மகேசுவரி கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்த தகவலின்பேரில் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மகேசுவரியின் காரை அவ்வப்போது, காரைக்குடி இலுப்பைக்குடி லட்சுமிநகரை சேர்ந்த சசிக்குமார் (33) என்பவர் ஓட்டி வந்துள்ளார். சம்பவத்தன்றும் அவர்தான் மகேசுவரியை காரில் அழைத்துச்சென்றுள்ளார்.

தலைமறைவாக இருந்த அவரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். மகேசுவரியை கொன்றது அவர்தான் என தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “பணம் கொடுக்கல், வாங்கல் தொழில் செய்து வந்த மகேசுவரிக்கு பணத்தேவை இருந்ததால், அதுபற்றி தன் டிரைவர் சசிக்குமாரிடம் கூறி இருக்கிறார். அதற்கு அவர், தனக்கு தெரிந்த நபரிடம் பெரும் தொகையை வாங்கி மகேசுவரியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பணத்தை திரும்ப கொடுக்காமல் அவர் இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது.

இதற்கிடையே பணம் கொடுத்தவர், அதை திரும்ப கேட்டு சசிக்குமாருக்கு அழுத்தம் கொடுத்ததாக தெரிகிறது. இதனால் சசிகுமார், மகேசுவரியிடம் பணத்தை திருப்பி தருமாறு தெரிவித்து வந்துள்ளார். இந்தநிலையில் காரைக்குடி அருகே ஆவுடைபொய்கை காட்டுப்பகுதியில் உள்ள ஒரு நிலத்தை வாங்கி விற்பது தொடர்பாக, அந்த இடத்தை பார்ப்பதற்காக காரில் சசிக்குமாரும், மகேசுவரியும் சென்றுள்ளனர். அங்கு வைத்து சசிக்குமார், மகேசுவரியிடம் பணத்தை கேட்டுள்ளார்.

அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரம் அடைந்த சசிக்குமார், கல்லால் மகேசுவரியின் முகத்தில் அடித்து முகத்தை சிதைத்து கொலை செய்துள்ளார். பின்னர் அவர் அணிந்து இருந்த 20 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு, அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரியவருகிறது” என்று போலீசார் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து சசிக்குமாரை போலீசார், கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 15 பவுன் நகைகளை போலீசார் முதற்கட்டமாக மீட்டனர். மீதம் உள்ள நகையை ஒரு கடையில் அவர் அடகு வைத்தது தெரியவந்தது. இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இந்த கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளதாக கூறி அவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி மகேசுவரியின் உறவினர்கள் நேற்று மதியம் காரைக்குடி பகுதியில், திருச்சி-ராமேசுவரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்