நகைக்காக மூதாட்டிகளை கொன்ற வழக்கில் விவசாயி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு

சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பமுயன்றதால் போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.;

Update:2025-11-08 07:13 IST

சேலம்,

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே இடங்கணசாலையை அடுத்த தூதனூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்த மாரிமுத்து மனைவி பாவாயி (வயது 70). அதே ஊரை சேர்ந்த அண்ணாமலை மனைவி பெரியம்மாள் (75). இவர்கள் 2 பேரும் ஒரே நாளில் அதே ஊரின் கல்குவாரி பகுதியில் தனித்தனியாக நடந்து சென்றபோது, மர்மநபர்கள் நோட்டமிட்டு அவர்களை கொன்று அவர் அணிந்திருந்த தலா 1 பவுன் தோடு, வெள்ளிக்காப்புகளை பறித்தனர்.

மேலும் 2 மூதாட்டியின் உடல்களை கல்குவாரி குட்டையில் வீசிச்சென்றனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அதில், பாவாயி குடும்பத்திற்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து கொண்டு அங்கேயே குடிசை அமைத்து வசித்து வந்த சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த அய்யனார் (55) என்பவர் தலைமறைவானது தெரிந்தது. இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

Advertising
Advertising

இந்த நிலையில் சங்ககிரி அருகே பதுங்கி இருந்த அய்யனாரை பிடிக்க போலீசார் முயன்றனர். அப்போது திடீரென்று தான் வைத்திருந்த அரிவாளால், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணனின் வலது கையில் வெட்டினார். இதை தடுக்க முயன்ற போலீஸ்காரர் கார்த்திகேயனை வெட்ட முயன்றார். அவர் விலகிக்கொண்டார். இதைப்பார்த்த போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், தான் வைத்திருந்த துப்பாக்கியால், அய்யனாரின் வலது காலில் சுட்டார்.இதில் காயம் அடைந்த அய்யனார், சுருண்டு விழுந்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அய்யனார் வெட்டியதில் காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதற்கிடையே சிகிச்சையில் இருந்த அய்யனாரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவா் நகைக்காக 2 மூதாட்டிகளையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த 2000-ம் ஆண்டு நகைக்காக 3 மூதாட்டிகளையும், 2004-ம் ஆண்டு 2 மூதாட்டிகளையும் கொலை செய்து உள்ளதும், இதில் ஒரு மூதாட்டியை கற்பழித்து கொடூரமாக கொலை செய்ததும் தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்